பெண்களை ஏமாற்றிய வழக்கில் கைது செய்யப்பட்ட, காசி மீது சிபிசிஐடி விசாரணை வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை வைத்துள்ளது.
இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் அகமது உசேன் தலைமையிலான கட்சியினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். பின்னர் இது குறித்து அகமது உசேன், 'நாகர்கோவிலைச் சேர்ந்த காசி என்பவர் சமூக ஊடகத் தொடர்பு மூலம் பல பெண்களையும், சிறுமிகளையும் ஏமாற்றி பாலியல் வன்புணர்வு செய்ததுடன் லட்சக்கணக்கில் மோசடியும் செய்துள்ளார். ஏற்கெனவே இவர் 2016ஆம் ஆண்டு ஒரு பெண்ணை ஏமாற்றியதாக வடசேரி காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
பெண்களின் தனிமையை பணமாக மாற்றிய குமரி இளைஞர் கைது!
கடந்த ஆண்டு பொள்ளாச்சியில் நடந்த தொடர் பாலியல் குற்றங்களில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு எதிராக பகிரங்கமான நிலைப்பாட்டை சமூக ஊடகங்களில் காசி பதிவிட்டிருந்தார். இதன் மூலம் இவர் பெண்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் உளவியல் கொண்டவர் என்பது தெளிவாகிறது. தற்போது பெண் மருத்துவர் ஒருவர் அளித்தப் புகாரின் பேரில் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார்.
இவர் மீது 9 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. காசியின் கூட்டாளிகள் குறித்த கூடுதல் தகவல்களைக் கண்டறிந்து, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் சிறார் பாலியல் காட்சிகளைப் பார்ப்போரைக் கண்டுபிடித்து நடவடிக்கைகள் எடுக்கும் காவல் துறையின் சைபர் கிரைம் பிரிவு, இந்த வழக்குத் தொடர்பான முழு உண்மையை வெளிகொண்டு வரவேண்டும்.
அதேபோல, இவர்மீது முதற்கட்டமாக சிபிசிஐடி விசாரணையும், இதைத் தொடர்ந்து இந்த வழக்கு தொடர்பாக சிபிஐ விசாரணையும் நடத்த வேண்டும். மேலும் தேசிய மகளிர் ஆணையமும், சிறார் பாதுகாப்பு ஆணையமும் இந்த வழக்குத் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும். காசி மீது போக்ஸோ சட்டத்தின் பிரிவுகளை உட்படுத்தி, நீதிமன்றத்தின் கண்காணிப்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும்' இவ்வாறு அவர் கூறியுள்ளார்.