கன்னியாகுமாரி: மீன்களின் இனப்பெருக்க காலம் என வரையறுக்கப்பட்டு கடந்த ஏப்ரல் மாதம் 15 ஆம் தேதி முதல் 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் அமலில் இருந்தது. இந்த தடை காலம் முடிவடைந்த நிலையில் நேற்று (ஜூன்15) அதிகாலை கன்னியாகுமரி மாவட்டம் சின்ன முட்டத்திலுள்ள மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து 300க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.
பின்னர் மீன்பிடித்து கொண்டு நேற்று இரவு அனைத்து விசைப்படகுகளும் கரை வந்து சேர்ந்தது. இதில் பாறை, கொழிசாலை, அயிலை , கனவா போன்ற ரக மீன்கள் கிடைத்ததாக மீனவர்கள் தெரிவித்தனர். மேலும் மீன்களை வாங்கிச் செல்வதற்காக கேரளாவில் இருந்து ஆயிரக்கணக்கான வியாபாரிகள் சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் குவிந்தனர்.
ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு மீன்கள் கிடைக்கவில்லை என்றும் மீன்களின் இருப்பிடத்தை கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்பட்டதாகவும்; ஒரு வாரத்தில் மீன்கள் அதிகமாக கிடைத்துவிடும் என்றும் மீனவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர். கடலில் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்ட போதிலும் , அதன் தாக்கம் காரணமாக கடலில் அதிகமாக பாதிப்பு இல்லை எனவும் மீனவர்கள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: கும்பகோணம் அருகே கடத்தப்பட்ட சிலைகள் அமெரிக்காவில் உள்ளது கண்டுபிடிப்பு - சிலை கடத்தல் பிரிவு