கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் உள்ள ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி கரோனா வார்டில் சிகிச்சை பெற்ற 34 பேர் இதுவரை பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கரோனா வார்டில் தற்போது 43 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
இந்நிலையில் துபாயில் இருந்து விமானம் மூலம் திருவனந்தபுரம் வந்து அங்கிருந்து குமரி மாவட்டம் வந்த கர்ப்பிணிப் பெண்ணுக்கு களியக்காவிளையில் ரத்த மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன.
அப்போது அவருக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து கர்ப்பிணிப் பெண் ஆசாரிப்பள்ளம் கரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தற்போது அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளவர்களை மருத்துவர்கள் 24 மணி நேரமும் கண்காணித்து வருகிறார்கள். கட்டுப்பாடு தளர்த்தப்பட்டதை அடுத்து வெளியூர்களில் இருந்து வருபவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இதனால் ஆரல்வாய்மொழி சோதனைச் சாவடியிலும் கூட்டம் அதிகமாக உள்ளது. சுகாதாரத்துறை அலுவலர்கள் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இவ்வாறு வெளிமாவட்டங்களில் இருந்து குமரி மாவட்டத்திற்கு வந்த 15 ஆயிரத்து 952 பேர் கரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இதில் 15 ஆயிரத்து 52 பேருக்கு கரோனா இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ளவர்கள் பரிசோதனை முடிவுக்காக காத்திருக்கின்றனர்.