குமரி மாவட்டத்தில் கடந்த மூன்று வாரங்களாக கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. தினமும் 25 முதல் 50-க்கும் அதிகமானோர் கரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுவருகின்றனர்.
கேரளாவிலிருந்து வந்த மூன்று பேருக்கும். ஜார்கண்டிலிருந்து வந்த ஒருவருக்கும் கரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மாவட்டம் முழுவதும் ஒரேநாளில் கரோனா பாதிப்பு 107 ஆக அதிகரித்தது.
இந்நிலையில் நாகர்கோவில் கோட்டார் காவல் நிலையத்தில் பணியாற்றிய காவல் ஆய்வாளர் ஒருவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து காவல் நிலையத்திற்கு மாநகராட்சி நிர்வாகம் சார்பில் கிருமிநாசினி தெளித்து சுத்தம்செய்யப்பட்டது.
கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்றுவருகிறார்கள். நாகர்கோவில் நகரப் பகுதியில் மற்ற பகுதிகளைக் காட்டிலும் பாதிப்பு அதிகமாக இருந்துவருகிறது.
நாகர்கோவில் நகரில் ஏற்கனவே கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் தொற்று உறுதியாகி உள்ளது. கிராமப்புறங்களிலும் கரோனா பாதிப்பு வேகமெடுத்துவருகிறது.
ராஜாக்கமங்கலம், அகஸ்தீஸ்வரம் தக்கலை, குருந்தன்கோடு யூனியன்களில் பாதிப்பு தினமும் உயர்ந்து கொண்டே செல்கிறது. ஆசாரிப்பள்ளம் மருத்துவமனையில் தேவையான அளவு படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
இதனைத் தொடர்ந்து நாகர்கோவில் எஸ்.எல்.பி. பள்ளி, ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரியிலும் மீண்டும் கரோனா சிகிச்சை மையங்களைத் திறக்க அலுவலர்கள் நடவடிக்கை மேற்கொண்டுவருகிறார்கள்.
இதையும் படிங்க: இந்தியாவில் 10 கோடி பேருக்கு மேல் கரோனா தடுப்பூசி போட்டாச்சு!