குமரி மாவட்ட கரோனா வைரஸ் தடுப்பு கண்காணிப்பாளரும், தமிழ்நாடு கைத்தறி மற்றும் துணிநூல் துறை இயக்குனருமான கருணாகரன், குமரி மாவட்டத்தில் நடைபெற்று வரும் கரோனா வைரஸ் தடுப்பு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் வடநேரேவுடன் ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வுக்கூட்டத்தில் கருணாகரன் பேசியதாவது, "மாவட்ட நிர்வாகத்தால் மேற்கொள்ளப்பட்ட மிகச்சிறப்பான தடுப்பு பணிகள் மூலம் குமரி மாவட்டத்தில் கரோனா வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசால் கரோனா நிவாரண நிதி குடும்ப அட்டைதாரர்களுக்கும், பல்வேறு அமைப்புசாரா நலவாரிய உறுப்பினர்களுக்கும், மீனவர் நலவாரிய உறுப்பினர்களுக்கும் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது. மேலும், நிதி வழங்கப்படாதவர்களுக்கு விரைவில் வழங்க சம்பந்தப்பட்ட அலுவலர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மீன்பிடி தடை காலத்தில் மீனவர் நலவாரிய உறுப்பினர்களுக்கு வழங்கவேண்டிய நிவாரண தொகையை உடனடியாக வழங்க மீன்வளத்துறை அலுவலர்கள் அதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும். குமரி மாவட்டத்தில் உள்ள 40 சோதனை சாவடிகளிலும், எல்லைகளிலும் வெளிமாவட்ட, வெளி மாநிலங்களில் இருந்து வரும் அனைத்து வாகனங்களும் சுகாதார பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது. கரோனா நோயினால் தனிமைப்படுத்தப்பட்ட மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளிலுள்ள அனைவருக்கும் தடையின்றி பால், உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் கிடைப்பதை அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும்." என்று கூறினார்.
இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ரேவதி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாத் உள்பட அனைத்து துறை உயரலுவலர்களும் கலந்து கொண்டனர்.
இதையும் பார்க்க: 80 மாவட்டங்களில் ஒருவருக்குக்கூட கரோனா இல்லை - ஹர்ஷ் வர்தன்