கன்னியாகுமரி: நாகர்கோவிலில் பிரபல செல்ஃபோன் கடைகளில் கடன் வழங்கும் பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றியவர் அருள் பிரகாஷ் (30). இவர் நாகர்கோவில் அருகே எட்டாமடை பகுதியில் பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அவரது ஊரை சேர்ந்த இளைஞர்கள் பலரிடம் செல்போன் மற்றும் மின்சாதன பொருட்கள் கடனுக்கு வாங்கி தருவதாகக் கூறியுள்ளார்.
ஊரில் உள்ள இளைஞர்களும் பொருட்கள் வாங்குவதற்கு இவரிடம் ஆலோசனை கேட்பதும், தவணை முறையில் கடன் பெற்று பொருட்களை வாங்குவது குறித்தும் அருள்பிரகாசை நாடியுள்ளனர். தன்னிடம் வரும் இளைஞர்களிடம் இஎம்ஐ(EMI) மூலம் ஃபோன் வாங்கி தருவதாகக் கூறி, ஆதார் கார்டு, பான் கார்டு, வங்கி கணக்கு விபரங்கள், ஏ.டி.எம்., கார்டு விபரங்களை பெற்றுள்ளார்.
மேலும் தாங்கள் இஎம்ஐ-ல் ஃபோன் வாங்குவதற்குத் தகுதி உடையவர்களா என மேற்கூறிய விபரங்களை சரி பார்ப்பதாக கூறி, தற்போது "சர்வர்" பிரச்னை இருப்பதாகவும் பின்பு சரியானவுடன் தங்களுக்கு தொலைபேசியில் தொடர்பு கொள்கிறேன் என கூறி அவர்களை அனுப்பி விடுவதை வாடிக்கையாக வைத்துள்ளார்.
பின்னர் அவர்களை தொடர்பு கொண்டு அவர்களது தொலைபேசி எண்ணிற்கு வரும் OTP - ஐ பெற்று கொள்வதோடு, அவர்களது அடையாள அட்டைகளை கொண்டு விலை உயர்ந்த ஐ.போண்களை வாங்கியுள்ளார். மேலும் வாடிக்கையாளர்களுக்குச் சந்தேகம் வராமல் இருக்க அவர்கள் கேட்கும் பொருட்களையும் இஎம்ஐ-ல் வாங்கி கொடுத்து வந்துள்ளார்.
இதில் வாடிக்கையாளர்களுக்கு தெரியாமலே அவர்களை ஏமாற்றி சுமார் 50 க்கு மேற்பட்டவர்களின் பெயரில் சுமார் 80 லட்சம் ரூபாய் முதல் 1 லட்சம் ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள ஐ ஃபோன்கள் வாங்கி வெவ்வேறு கடைகளிலும், தனிநபர்களுக்கும் விற்பனை செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் 3 மாதங்களுக்குப் பின் இஎம்ஐ தொகை கட்டாமல் இருப்பதால் சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர்களை நிதி நிறுவனங்களில் இருந்து தொடர்பு கொள்ளும் போது தான் தாங்கள் ஏமாற்றப்பட்டுள்ளதும், அருள் பிரகாஷ் மோசடியில் ஈடுபட்டுள்ளதும் தெரியவந்ததாகப் பாதிக்கப்பட்டவர்கள் கூறுகின்றனர்.
மேலும் இது குறித்து அருள் பிரகாஷ் இடம் கேட்கும் போது தான் பொருட்கள் வாங்கியது உண்மை தான், அந்த பொருட்களுக்கான இஎம்ஐ தொகையை நானே செலுத்தி விடுகிறேன் என்று சமாதானம் பேசி அனுப்பிய நிலையில், திடீரென அவர் வெளிநாட்டிற்குச் சென்று விட்டதாகப் பாதிக்கப்பட்டவர்கள் ஆவேசமாகத் தெரிவிக்கின்றனர்.
தற்போது, தங்கள் பெயரில் எடுக்கப்பட்டு, கண்ணால் பார்க்கவே செய்யாத விலை உயர்ந்த ஐ- ஃபோன்களுக்கு தாங்கள் இஎம்ஐ கட்டும் பரிதாப நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும், நூதன முறையில் தங்களது ஆதார், பான் கார்டு, ஏ.டி.எம்., கார்டுகளை கொண்டு மோசடியில் ஈடுபட்ட அருள் பிரகாஷ் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாதிக்கப்பட்ட இளைஞர்கள் கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.
இதையும் படிங்க: ரூ.3 லட்சம் லஞ்சம் வாங்கிய கனிமவளத்துறை உதவி இயக்குநர் கைது!