தமிழ்நாடு,புதுச்சேரியின் இந்திய மருத்துவ இயற்பியலாளர்கள் சங்கத்தின் 23ஆவது மாநாடு கன்னியாகுமரியில் தொடங்கியது. இரண்டு நாட்கள் நடைபெற இருக்கிற இந்த மாநாட்டினை கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் தலைவர் டாக்டர். ஆர்.பாலாஜி நாதன் தொடங்கி வைத்தார்.
இந்த மாநாட்டில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியிலிருந்து ஏராளமான மருத்துவர்கள் கலந்துகொண்டனர். இந்நிகழ்விற்கு பின்பு பத்திரிகையாளர்களை சந்தித்து பேசிய தமிழ்நாடு,புதுச்சேரியின் இந்திய மருத்துவ இயற்பியலாளர்கள் சங்கத்தின் தலைவர் டாக்டர் பி.காளியப்பன், ”தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் 15லட்சம் பேர் புற்று நோயால் பாதிக்கப்படுகின்றனர்.
இந்தியாவின் மற்ற மாநிலங்களில் எண்ணிக்கையோடு ஒப்பிடுகையில் தமிழ்நாட்டில் புற்றுநோய் பாதிப்பு குறைவாகும். தற்போது புற்று நோயாளிகள் முறையாக மருந்துகளை உட்கொண்டாலே அந்நோயில் இருந்து முழுமையாக குணமடையலாம்.
மற்ற காரணிகளைவிட புகையிலை, போதை பொருட்கள் உட்கொள்ளும் பழக்கம் உள்ளவர்களுக்கு அதிகளவில் புற்றுநோய் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே, புகையிலை பழக்கம் போன்றவற்றை கைவிட வேண்டும்" என்றார்.