நாகர்கோவில் அருகே இறச்சகுளம் பகுதியில் பிரபல தொழில்நுட்பக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு மூன்றாம் ஆண்டு சிவில் பிரிவில் படித்துவரும் மாணவ மாணவிகளைக் கல்லூரி பேராசிரியர்கள் நேற்று பூதப்பாண்டி அருகே உள்ள முக்கடல் அணையைப் பார்வையிட கல்விச் சுற்றுலா அழைத்துச் சென்றனர்.
அதில் கரிய மூர்த்தி என்ற மாணவன், அதே பிரிவில் பயிலும் மாணவியை ஒருதலையாக காதலித்துள்ளார். மாணவனின் காதலை ஏற்க மாணவி மறுத்ததால், சுற்றுலா சென்ற இடத்தில் வைத்து ஆசிரியர்கள், மாணவ மாணவிகள் முன்னிலையில் அந்த மாணவியை கரிய மூர்த்தி தாக்கியுள்ளான். இதனை சக மாணவர் ஒருவர் தட்டிக் கேட்டுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த கரிய மூர்த்தி இறச்சகுளத்தில் உள்ள ரவுடி கும்பலுக்குத் தகவல் கொடுத்துள்ளார். உடனடியாக கூலிப்படை கும்பல் அங்கு வந்து தட்டிக் கேட்ட மாணவனை உருட்டுக் கட்டை மற்றும் இரும்பு கம்பியால் சரமாரியாகத் தாக்கினர். ரவுடி கும்பல் தாக்குவதைத் தடுக்க கல்லூரி பேராசிரியர்கள் முன்வரவில்லை.
இந்த சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுக்க காயமடைந்த மாணவி மற்றும் மாணவன் முன் வந்த நிலையில், கல்லூரி நிர்வாகம் தடுத்து மிரட்டி, இருவரையும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ரவுடி கும்பல் தாக்கும் இந்த வீடியோ நேற்று முதல் சமூக வலைத்தளத்தை ஆக்கிரமித்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் மீண்டும் ரவுடிகளின் அட்டகாசம் அதிகரித்துள்ளதால், பொதுமக்கள் அச்சமடைந்துள்ளதாகவும், காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.