குமரி மாவட்டம், இறைச்சகுளத்தில் ஜேக்கப் பாரா மெடிக்கல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு, சுமார் 80 மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் உட்பட 10 பணியாளர்கள் பணிபுரிந்து வந்தனர். கல்லூரியின் நிறுவனர் ரவி(35). இவர் இரண்டு பெண் ஊழியர்களின் துணையோடு, ஆசிரியைகள் மற்றும் மாணவிகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார்.
கடந்த சில நாள்களுக்கு முன்பு, ரவி தனது அறையில் வைத்து ஆசிரியை ஒருவரை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்துள்ளார். இதனால் அந்த ஆசிரியர் கண்ணீருடன் அந்த அறையை விட்டு வெளியேறியதை பார்த்த மாணவிகள், அறையில் நடந்த விவரங்களை கேட்ட மாணவிகள் அதிர்ச்சி அடைந்து இது குறித்து ஆசிரியரின் பெற்றோரிடம் கூறியுள்ளனர்.
இதைத் தொடர்ந்து, அந்த ஆசிரியை பூதப்பாண்டி போலீசில் புகார் அளித்தார். இது தொடர்பாக ஆசிரியைகள், மாணவிகளை ஏ.எஸ்.பி. ஜவகர் தலைமையிலான போலீசார் அழைத்து விசாரித்தனர். இதில் அந்த நபர் கல்லூரி ஆசிரியைகள் மற்றும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. இதையடுத்து கல்லூரி நிர்வாகி ரவி மற்றும் அவருக்கு உதவியதாக கல்லூரியின் இணை இயக்குநர்கள் நளினி(30), கலா(28) ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர்.

இந்த கல்லூரியில் ஒரு சில மாணவிகள் மற்றும் ஆசிரியைகளும், ரவியின் பாலியல் தொல்லைக்கு ஆளாகியிருப்பதாகவும், பாலியல் தொல்லை காரணமாக, இந்த கல்லூரியில் வேலை பார்த்த ஆசிரியைகள் பலர் வேலையை விட்டு சென்றதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. ரவியின் பாலியல் தொல்லையை எதிர்க்காமல் இருந்தால் ஆசிரியர்களுக்கும், மாணவிகளுக்கும் எந்தப் பிரச்னையும் ஏற்படுவதில்லை என்றும், எதிர்த்தால் அவர்களுக்கு அலுவலக ரீதியாக டார்ச்சர் கொடுத்து வந்ததாகவும், கல்லூரியில் உள்ள பெண்கள் விடுதியில், கேமராக்கள் பொருத்தி அதன்மூலம் மாணவிகளை ரகசியமாக கண்காணித்து வந்ததாகவும்
போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.