கன்னியாகுமரியில் இன்று (ஜூன்.09) மாவட்ட ஆட்சியர் அரவிந்த் தலைமையில் சுற்றுலா மேம்பாடு குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் சிற்றார் அணையில் படகு தளம், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம், தனியார் நிறுவனங்கள் வாயிலாக தங்கும் விடுதிகள், நீர் விளையாட்டுகள், ரிசார்ட்டுகள் அமைத்திட சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
நடவடிக்கைகள்
அதேபோல் கன்னியாகுமரி திரிவேணி சங்கமத்திற்கு செல்லும் நடைபாதைகளில் பசுமைச் செடிகள், படிக்கட்டுகளில் வண்ணம் பூசுதல், புராதன சிலைகள், பூங்காக்கள் அமைத்தல், சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் கலாச்சார நிகழ்ச்சிகள் நடத்தி உரிய நடவடிக்கை மேற்கொள்ளவும், கைவினைப் பொருள்கள், அலங்கார மீன்கள், பழங்காலப் பொருள்கள், மீன் கண்காட்சி அமைக்கவும், கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் சூரியன் உதிப்பது மற்றும் மறைவதைக் காண்பதற்கு வருவதால் அவர்களுக்கு வசதியாக அங்கு இருக்கைகள் அமைக்கவும் அலுவலர்களுக்கு அறிவுறித்தினார்.
படகு தளத்தினை விரிவு படுத்துதல், பாலம் அமைத்தல்
மேலும், கன்னியாகுமரி விவேகானந்தர் பாறை, திருவள்ளுவர் சிலைக்கு செல்ல பெரிய அளவிலான படகுகளை பயன்படுத்துவதாலும், அதிக படகுகளை பயன்படுத்துவதற்கான படகு தளத்தினை விரிவுபடுத்தவும், விவேகானந்தர் பாறை, திருவள்ளுவர் சிலைக்கு இடையே பாலம் அமைப்பதற்கான ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன.