கன்னியாகுமரி: தமிழகத்தின் பாரம்பரிய தற்காப்பு கலைகளில் ஒன்றான சிலம்பத்திற்கு மத்திய அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சகம் அங்கீகாரம் அளித்துள்ளதாக அகில இந்திய சிலம்பம் சம்மேளன நிறுவனர் செல்வராஜ் ஆசான் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அகில இந்திய சிலம்பம் சம்மேளன நிறுவனர் செல்வராஜ் ஆசான் கூறியதாவது:
தமிழகத்தின் பாரம்பரிய தற்காப்பு கலைகளில் ஒன்றான சிலம்பத்திற்கு மத்திய அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சகம் அங்கீகாரம் அளித்துள்ளது. இதன் மூலம் உலக தமிழர்களின் பாரம்பரிய தற்காப்பு கலையான சிலம்பம் அடுத்த கட்டத்தை எட்டுவதற்கு மத்திய அரசு வழி வகை செய்துள்ளது.
இந்திய அளவில் எத்தனையோ தற்காப்பு கலைகள் இருந்தாலும் அவற்றிற்கெல்லாம் தாய் கலை போன்று விளங்குவது தமிழர்களின் கலையான சிலம்பம். தனி திறமை போட்டிகளாக சிலம்பம் 10 பிரிவுகளாக விளையாடப்படுகிறது.
கம்பு வீச்சு, இரட்டை கம்பு வீச்சு, வாள் வீச்சு, அலங்கார வீச்சு, இரட்டை வாள் வீச்சு, இரட்டை சுருள் வாள் வீச்சு, ஒற்றை சுருள் வாள் வீச்சு, மடு, குத்து வரிசை என 10 விதமான தனி திறமை போட்டிகளாக விளையாடப்படுகிறது.
மேலும் 3 பேர் குழுவாக கலந்து கொள்ளும் ஆயுத வீச்சு, ஆடவர், மகளிர் என தனி, தனி பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்படுகின்றன. மத்திய அரசின் இந்த அங்கீகாரத்தின் மூலம், இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் சிலம்ப போட்டிகள் அந்தந்த மாநில அரசின் அங்கீகாரத்துடன் நடத்துவதற்கு வழி வகை ஏற்பட்டுள்ளது என்றார்.