நாகர்கோவிலில் அகில இந்திய காங்கிரஸ் கட்சி செயலாளரும், தமிழ்நாடு காங்கிரஸ் பொறுப்பாளருமான சஞ்சய் தத் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறுகையில், "மத்திய அரசானது எதிர்க்கட்சி தலைவர்களை அடக்கி ஒடுக்க வருமான வரித்துறை, சிபிஐ உள்ளிட்ட துறைகளை பயன்படுத்துகிறது.
மத்திய அரசு துறைகள் சுதந்திரமாக செயல்பட ஆளுங்கட்சி விடுவதில்லை. எங்கள் கூட்டணி மீது பொதுமக்களுக்கு நம்பிக்கை உள்ளது. பிரதமர் நரேந்திர மோடியால் அறிவிக்கப்பட்ட ஸ்மார்ட் சிட்டி திட்டம், புல்லட் ரயில், ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை, ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிலும் ரூ.15 லட்சம், ஜிஎஸ்டி உள்ளிட்ட எல்லா திட்டங்களும் தற்போது கைவிடப்பட்டுவிட்டனவா என்பது குறித்து பதிலளிக்க வேண்டும்.
கன்னியாகுமரிக்கு பரப்புரைக்கு வரும் பிரதமர் மக்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும். இல்லையென்றால் மக்கள் அவர்களை தோற்கடிக்க வேண்டும். பேரிடர் காலத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகளை பிரதமர் பார்க்க வரவில்லை. ஆனால், திரைப்பிரபலங்களின் திருமண விழாவில் கலந்துகொண்டார். தேர்தல்யென்றால் மட்டும் மக்களைப் பார்க்க ஓடி வருகிறார்.
2019ஆம் ஆண்டு 427 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். இதை மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை. விவசாயிகளுக்கு அதிமுக அரசின் ஆதரவு கிடையாது. பாஜக பச்சோந்தியை விட வேகமாக நிறம் மாறுகிறது" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: தமிழில் பேசி வாக்கு சேகரித்த காங்கிரஸ் கமிட்டி செயலர் சஞ்சய் தத்