கன்னியாகுமரி: மண்டைக்காடு பகுதியில் புகழ்பெற்ற நூற்றாண்டு பழமைவாய்ந்த மண்டைக்காடு பகவதியம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் நேற்று (ஜூன் 2) காலை தீ விபத்து ஏற்பட்டது.
கோயில் கருவறை கட்டட மேற்கூரையில் கரும்புகையுடன் தீப்பற்றி எரிந்துள்ளது. இதைக் கண்ட அப்பகுதி பொதுமக்கள் தீயணைப்புத் துறைக்குத் தகவல் கொடுத்தனர்.
குளச்சல், தக்கலையிலிருந்து இரண்டு தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
இந்நிலையில் ஆலய வளாகத்தில் குவிந்த பக்தர்கள், அலுவலர்களை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அர்ச்சகர்களின் அலட்சியத்தால்தான் இந்தத் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகவும், சம்பந்தப்பட்ட அர்ச்சகர்களை மாற்ற வேண்டும் என்று கூறியதோடு ஆலய நிர்வாக அலுவலகம் முன்பு முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அம்மன் சிலையில் அணிவித்திருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க நகைகளின் தற்போதைய நிலை என்ன என்றும் விளக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் பக்தர்கள் முன்வைத்தனர். தீ விபத்தால் ஆலயம் உருக்குலைந்து நிற்கும் காட்சி வேதனையளிப்பதாகவும் கூறினர்.
அப்போது அங்கு ஆய்வு செய்யவந்த தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ், அர்ச்சகர்கள் தவறு செய்திருப்பது தெரியவந்தால் துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். இதனைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட பக்தர்கள் கலைந்துசென்றனர்.