கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தை அடுத்த அம்சியில் நேற்று தமிழ்நாடு கதர் மற்றும் கிராம தொழில் வாரிய துறை அமைச்சர் பாஸ்கரன் தேன் உற்பத்தியாளர்களுடன் ஆய்வு நடத்துகிறார். இதற்காக கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகைக்கு நேற்று இரவு வந்த அமைச்சரை மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு. வடநேரே, தமிழ்நாடு கதர் துறை இயக்குநர் நடராஜன், கன்னியாகுமரி மாவட்ட உதவி இயக்குனர் சுதாகர், கட்சி நிர்வாகிகள் உட்பட பலரும் வரவேற்றனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பாஸ்கரன்,
"தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டத்தில்தான் அதிகளவில் தேன் உற்பத்தி செய்யப்பட்டு பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுவருகிறது. இந்த தேனுக்கு புவிசார் குறியீடு பெற முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்தத் தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு தொழில் உரிமம், அடையாள அட்டை, இத்தொழிலில் ஈடுபட்டு மரணமடைந்தவர்களின் வாரிசுகளுக்கு அடையாள அட்டை வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளது.
இதனால் அவர்கள் உற்பத்தி செய்யும் தேனை தேன் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் விற்க முடியாமலும் அவர்களுக்கு கூட்டுறவு சங்கங்கள் வழங்கும் சலுகைகள் மறுக்கப்படுவதாலும் அது குறித்து அலுவலர்களிடம் பேசி முடிவெடுக்கப்படும்" என்று உறுதியளித்தார்.