நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தலும், 18 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை இடைத்தேர்தலும் ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில், அனைத்து கட்சியினரும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் திமுக-காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் ஞான திரவியம் தனது ஆதரவாளர்களுடன் இன்று கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பு அன்புவனத்தில் அமைந்துள்ள வெயிலாள் குடிலுக்கு சென்று மரியாதை செலுத்தினார். பின்னர், அய்யா வைகுண்டசுவாமி தலைமைபதி நிர்வாகி மகாகுரு பால பிரஜாபதி அடிகளாரை மரியாதை நிமித்தமாக சந்தித்து, நடைபெறுகின்ற மக்களவைத் தேர்தலில் தனக்கு ஆதரவு தருமாறு கேட்டுக்கொண்டார்.
அப்போது ஞான திரவியத்திற்கு ஆதரவும், ஆசியும் பால பிரஜாபதி அடிகளார் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், 'இப்போது உள்ள காலக்கட்டத்தில் மனு தர்மத்தை காக்க நமது நாட்டில் ஆட்சி மாற்றம் என்பது முக்கியமானது. எனவே ஞான திரவியமும் அவர் சார்ந்துள்ள கட்சிகளும் கண்டிப்பாக இந்த தேர்தலில் வெற்றி பெறும்' என்று கூறினார்.