தமிழக அரசின் பாட திட்டத்தில் அய்யா வைகுண்டரின் வாழ்க்கை வரலாறு பாடமாக வைக்கப்பட்டிருந்தது. அதில் அய்யா வைகுண்டர் குறித்து தவறான தகவல்களை தெரிவிக்கப்பட்டிருந்தன.
எனவே இவைகளை நீக்கி விட்டு உண்மையான தகவல்களை பாடமாக வைக்க வேண்டும் என்று அய்யாவழியினர் சார்பில் நெல்லை மாவட்டம், கன்னியாகுமரி மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு கொடுத்தனர்.
இந்த கோரிக்கையை ஏற்ற தமிழக அரசு இந்த பாடத்திட்டத்தை நீக்க உத்தரவு பிறப்பித்தது. மேலும் திருத்தங்கள் செய்து அடுத்த ஆண்டு பாடத் திட்டத்தில் அய்யா வைகுண்டர் குறித்து சரியான வரலாறு பாடத்திட்டமாக வைக்கப்படும் என்றும் தெரிவித்தது.
இதுகுறித்து அய்யா வைகுண்டர் அறநெறி பரிபாலன அறக்கட்டளை நிறுவனத் தலைவர் வக்கீல் பால ஜனாதிபதி செய்தியாளர்களிடம் கூறியதாவது, அய்யாவழியினரின் எழுச்சி மற்றும் கட்டுப்பாட்டை உணர்ந்த தமிழ்நாடு அரசு, அய்யா வைகுண்டர் குறித்த பாடத்தை நீக்குவதாக அறிவித்து , தவறுகளை திருத்தி அடுத்த வருடம் சரியான வரலாறு பாடமாக வைக்கப்படும் என்று கூறியது வரவேற்கத்தக்கது. இதற்கு அய்யாவழியினர் சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
அய்யா உதய தினத்தை நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களுக்கு வட்டார விடுமுறையாக மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்திருந்தார். ஆனால் தமிழ்நாடு முழுவதும் பெருமளவில் அய்யாவழி மக்கள் வாழ்கின்றனர். எனவே அய்யா உதய தினத்தை மாநிலம் முழுவதும் பொது விடுமுறையாக அறிவிக்க இந்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.