சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரிக்கு வெளிநாடு, உள்நாடுகளிலிருந்து தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வது வழக்கம். இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் அதிகாலையில் சூரிய உதயமாகும் காட்சியைப் பார்த்து, ரசித்து விட்டு, முக்கடல் சங்கமத்தில் புனித நீராடி, பகவதி அம்மன் கோயிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்வார்கள்.
அதன்பின்னர் கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம், 133 அடி உயர திருவள்ளுவர் சிலை ஆகிவற்றைப் படகில் சென்று பார்வையிடுவதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். பின்னர், இங்குள்ள கடைகளில் பொருட்களை வாங்கிவிட்டு, காந்தி மண்டபம், காமராஜர் மண்டபம் உள்ளிட்ட சுற்றுலாப் பகுதிகளை பார்த்துவிட்டு மாலையில் சூரிய அஸ்தமனத்தையும் கண்டுகளிக்கின்றனர்.
அதிகாலையில் சூரியன் உதயமாகும் காட்சியை, கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம், சங்கிலித்துறை கடற்கரையில் நின்று தான் பார்க்க முடியும். ஆனால், இந்த கடற்கரைப் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் நின்று சூரிய உதயமாகும் காட்சியைக் காண போதுமான இடவசதி இல்லாமல் இருந்து வந்தது.
இதனைத்தொடர்ந்து கன்னியாகுமரி திரிவேணி சங்கமம், சங்கிலித்துறை கடற்கரை பகுதி, பகவதி அம்மன் கோயில் அருகே உள்ள கிழக்குப்பகுதி ஆகியப் பகுதிகளில் ரூபாய் 24 லட்சம் செலவில் இருக்கைகளுடன் கேலரி அமைக்க, முடிவு செய்யப்பட்டு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த கேலரி 5 அடுக்குகளாக அமைக்கப்பட்டு வருகிறது.
தற்போது இந்தப் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. எனவே, இந்தப் பணிகளை சீக்கிரம் முடிக்க மாவட்ட நிர்வாகம் முடிவு செய்து, தற்போது பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது.
தற்போது கரோனா தொற்று காரணமாக உள்ள விடுமுறையினால், கன்னியாகுமரியில் சுற்றுலாப் பயணிகள் இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகிறது. எனவே, சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகமாக வருவதற்கு முன், திட்டப் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.