தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் ஆகியோர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநில அளவில் போராட்டங்கள் நடத்தி வருகின்றன. அதன் தொடர்ச்சியாக கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே இன்று காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.
முன்னாள் முன்னாள் ஜெயலலிதா சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அங்கன்வாடி ஊழியர், உதவியாளர்களை அரசு ஊழியர் ஆக்குவேன் எனக் கூறி இருந்ததை தமிழ்நாடு அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும், அகவிலையுடன் கூடிய ஓய்வூதியம், முறையான குடும்ப ஓய்வூதியம் அறிவிக்க வேண்டும், பணி ஓய்வு பெறும்போது பணி கொடையாக ஊழியர்களுக்கு 10 லட்ச ரூபாயும் உதவியாளர்களுக்கு 5 லட்சம் ரூபாயும் வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
விருதுநகர்:
விருதுநகர் மாவட்டத்தில் தமிழ்நாடு ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பாக பணி ஓய்வு பெறும் போது பணிக்காக ரூபாய் 10 லட்சம் வழங்க வேண்டும் எனக் கூறி 300க்கும் மேற்பட்ட ஊழியர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தென்காசி:
தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் 500க்கும் மேற்பட்டோர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்தில் அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களை அரசு ஊழியராக வேண்டும், அவர்களுக்கு முறையான காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், அகவிலைப்படியுடன் கூடிய முறையான ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதையும் படிங்க: ஊர்ப்புற நூலகருக்கு காலமுறை ஊதியம் வழங்க கோரிக்கை