மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் 33ஆவது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. அகஸ்தீஸ்வரம் ஒன்றியத்திற்குட்பட்ட இடத்தில் அலங்கரித்து வைக்கப்பட்ட எம்ஜிஆர் உருவபடத்திற்கு அதிமுக நட்சத்திர பேச்சாளர் அன்பழகன் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
எம்ஜிஆர்
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”உலகமெங்கும் உள்ள தமிழர்களிடம் எல்லை கடந்து அன்பு கொண்டவர் எம்ஜிஆர். அவர் ஒருவரே ஒவ்வொரு தனி மனிதனுக்கும் என்ன தேவையோ அதை அறிந்து பூர்த்தி செய்தவர். தன்னை நாடி வந்தாலும், வராவிட்டாலும் தேடி,தேடி சென்று உதவிசெய்தார்.
காமராஜர் அமைச்சரவையில் அமைச்சராக இருந்த கக்கனை காங்கிரஸ் கைவிட்ட நிலையில் கடைசிவரை அவரைக் கண்கலங்கவிடாமல் உதவிசெய்தார். அவரின் மகத்தான திட்டமான சத்துணவு திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டில் வறுமையை விலாசம் இல்லாமல் ஆக்கினார்.
காமராஜர் என் தலைவர், அண்ணா என் வழிகாட்டி என்று தைரியமாக சொன்னவர். அவர் உருவாக்கிய அதிமுக வாழ்ந்து கொண்டேதான் இருக்கும். தொண்டர்கள் வருவார்கள், வாழ்வார்கள். புது ரத்தம் பாய்ச்சியது போல என்றும் புத்துணர்வோடு இருக்கும் ஒரே இயக்கம் அதிமுக.
அது ஒரு நதி போல ஒடிகொண்டிருக்குமே தவிர குட்டைபோல தேங்கி நிற்காது. எம்ஜிஆர், ஜெயலலிதா, முதலமைச்சர் எடப்பாடியார், துணை முதலமைச்சர் ஓபிஎஸ் போன்றவர்களின் சாதனைகளால், அடுத்தாண்டு வரும் சட்டப்பேரவை தேர்தலிலும் அதிமுக வெற்றி பெறும். மீண்டும் தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சி தொடரும்” என்றார்.
இதையும் படிங்க:எம்ஜிஆரின் கடைசி நிமிடங்கள்...!