கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளிமலை விவேகானந்தா ஆசிரமத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்படுகிறது இந்து தர்ம வித்யாபீடம். தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட பிற பகுதிகளில் இந்த அமைப்பு மாணவர்களுக்கு ஆன்மீக வகுப்புகளை நடத்தி வருகிறது. இந்நிலையில், இந்து தர்ம வித்யாபீடம் மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற மாதா அமிர்தானந்தமயி மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி ஆன்மீக சொற்பொழிவாற்றினார்.
அப்போது அவர் கூறுகையில், 'படித்தால் மட்டும் போதாது, அதை பின்பற்றி மற்றவர்களுக்கு உதாரணமாக வாழ்ந்து காட்டவேண்டும். முயற்சிதான் உங்களது வெற்றியை நிர்ணயிக்கும். இறையருள் இருந்தால் நாம் வாழ்வில் வெற்றி பெறமுடியும். நம் தாயை மதிப்பது போல் நம்முடைய பண்பாட்டையும் மதிக்க வேண்டும். இன்று வாழ்வில் எதிலும் வேகம். ஒன்றிலும் கவனம் செலுத்த முடிவதில்லை.
ஓட்டமே வாழ்க்கையானது, நவீன எந்திரங்கள் நமக்கு அவசியமே, ஆனால் அளவுக்கு மிஞ்சினால் அவை ஆபத்தானதும் கூட. எந்திரங்களுடன் பழகியே, மனிதனிடம் அன்புக்கு மதிப்பில்லாமல் போய்விட்டது. உடல்நலன் காப்பதற்கு பயிற்சி மேற்கொள்ளும் நாம், மனதை செம்மைப்படுத்த பயிற்சி எடுப்பதில்லை. இதற்கு தியானம் அவசியமாகிறது. அரசு சட்டதிட்டங்களை மதிப்பது போன்று, இயற்கையின் சட்டதிட்டங்களையும் நாம் மதிக்க வேண்டும். அதற்கு முரணாக நாம் செயல்படக்கூடாது. இயற்கை நமக்கு எதிரல்ல, அதை நாம் பாதுகாக்க வேண்டும்.
ஒருகாலத்தில் மரம் வெட்டுவதற்கு முன் வணங்கி, சம்பந்தப்பட்ட மரத்திடம் அனுமதி பெற்றே வெட்டிய பண்பாடு நம்முடையது. நம்முடைய முன்னோர்கள் ஒரு மரம் வெட்டினாலும் பத்து மரம் நட்டதுடன், மரத்துக்கும், செடிக்கும், விலங்குக்கும் கோயில்கட்டி மதித்து வாழ்ந்தனர்' என்று கூறினார்.