தமிழ்நாட்டின் கிழக்கு கடற்கரைப் பகுதிகளில் ஆழ்கடலுக்குச் சென்று மீன் பிடிக்கும் விசைப்படகு மீனவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 15ஆம் தேதி முதல் மீன்களின் இனப்பெருக்க காலம் என வரையறுக்கப்பட்டு 60 நாட்கள் மீன் பிடி தடைகாலமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் இந்த ஆண்டிற்கான மீன்பிடி தடை காலம் கடந்த ஏப்ரல் மாதம் 15ஆம் தேதி தொடங்கியது. கன்னியாகுமரி மாவட்டத்தில் சின்னமுட்டம் விசைப்படகு மீன்பிடித் துறைமுகத்தில் உள்ள சுமார் 350க்கும் மேற்பட்ட விசைப் படகுகள் கரையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்தன. மீனவர்கள் தங்கள் படகுகள், மீன்பிடி வலைகள் உள்ளிட்ட உபகரணங்களை பழுதுபார்க்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர் .
இந்நிலையில் மீன்பிடி தடைக்காலம் நேற்று நள்ளிரவோடு முடிவடைந்தது. இதனைத் தொடர்ந்து சின்னமுட்டத்திலுள்ள 350க்கும் மேற்பட்ட மீனவர்கள் மிகுந்த உற்சாகத்துடன் இன்று அதிகாலையில் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.
இதனையொட்டி மீன்கள் கெட்டுப்போகாமல் இருக்க ஐஸ் கட்டிகளை தூளாக்கி தங்களுடன் எடுத்துச் சென்றனர். இந்த சீசனில் விலை உயர்ந்த, தரம் வாய்ந்த ஏராளமான மீன்கள் கிடைக்கும் என விசைப்படகு மீனவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.
இந்த மாவட்டத்தில் ஆழ்கடலில் சென்று மீன் பிடிக்க செல்லும் மீனவர்களுக்கு, அதிகாலையில் சென்று இரவு 10 மணிக்கு கரை திரும்ப மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில் தமிழ்நாட்டின் கிழக்கு கடற்கரை பகுதியில் மட்டும் தங்கி மீன்பிடிக்க அனுமதிக்க கோரி சின்னமுட்டம் மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.