கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலைச் சேர்ந்தவர் காசி. இவர், சமூகவலைத்தளங்களில் போலி கணக்குகள் மூலம், இளம் பெண்களுக்கு காதல் வலை விரித்துள்ளார். அதில் சிக்கும் பெண்களை ஏமாற்றி தனிமையில் நெருக்கமாக இருக்கும் போது வீடியோ எடுத்து அதனை காட்டி பண மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில், காசி மீது சென்னையைச் சேர்ந்த பெண் மருத்துவர் ஒருவர் கொடுத்த புகாரைத்தொடர்ந்து, பல பெண்கள் அவர் மீது அடுக்கடுக்கான தொடர் புகார்கள் கொடுத்தனர்.
இதனைத் தொடர்ந்து காசி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். நீதிமன்ற உத்தரவுப்படி காசியை காவலில் எடுத்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். மேலும், காசியால் பாதிக்கப்பட்ட இளம் பெண்களின் ஆபாசப் படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிடவும் இளம் பெண்களிடம் பணம் கேட்டு மிரட்டவும் காசிக்கு உதவியாக இருந்த அவரது நண்பர் டேசன் ஜினோ (19) என்பவரை கைது செய்துள்ள காவல்துறையினர், அவரிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
காசி விவகாரத்தை காவல்துறையினர் தீவிரமாக விசாரித்து வரும் நிலையில் காசியை ஜாமீனில் எடுக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் காசிக்கு ஆதரவாக வழக்கறிஞர்கள் யாரும் ஆஜராகக் கூடாது என நாகர்கோவில் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை வழக்கறிஞர் சங்கத் தலைவர் ராஜேஷ் இன்று வெளியிட்டார்.
இதையும் படிங்க: பொருளாதார ஊக்குவிப்பு திட்டம் மூலம் வீடு வாங்குவோர் பயனடைவர் - மத்திய அமைச்சர்