அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் விஜயகுமார் இன்று ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்குச் சென்று பார்வையிட்டார். அப்போது மருத்துவக் கல்லூரி வளாகத்தில் இருந்த கரோனா நோய் சிறப்பு வார்டை ஆய்வு செய்தார். இதன்பின்னர் மருத்துவக் கல்லூரி முதல்வர் சுகந்தியிடம் தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.1 கோடியினை வழங்கி கரோனா நோய் பாதிப்பை எதிர்கொள்ளத் தேவையான மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை வாங்கிக் கொள்ளும்படி அறிவுறுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்ததாவது, "உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கரோனா வைரஸ் நோயைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் குமரி மாவட்டத்தில் கரோனா நோய் பாதிப்பில் இருந்து மக்களை மீட்பதற்கு தேவையான மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்களை வாங்குவதற்காக எனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 1 கோடியினை ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு வழங்கியுள்ளேன்.
குறிப்பாக நமது மருத்துவமனையில் வென்டிலேட்டர் வசதி இல்லை என்று மருத்துவக்கல்லூரி முதல்வர் சுகந்தி தெரிவித்தார். எனவே, முதல்கட்டமாக நாளையே வெண்டிலேட்டர் வாங்கும் வகையில் இந்தப் பணத்தை பயன்படுத்திக் கொள்ளுமாறு மருத்துவக் கல்லூரி முதல்வரிடம் தெரிவித்துள்ளேன்" என்றார்.
ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் சுகந்தி செய்தியாளர்களிடம் பேசியபோது, "குமரி மாவட்டத்தில் கரோனா வைரஸ் பாதிப்பு இதுவரை யாருக்கும் இல்லை. எனினும், ஆசாரிபள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது.
இங்கு வென்டிலேட்டர், ஆக்ஸிஜன் புளோ கார்டு, ஆர்ஓ பிளான்ட், மல்டி பேரா மானிட்டர், ஈசிஜி இயந்திரம், போர்ட்டபிள் டிஜிட்டல் எக்ஸ்ரே, அல்ட்ரா சோனிக் இயந்திரம், ஸ்திரேட்சேர், சக்கர நாற்காலி போன்றவை மருத்துவமனைக்கு வாங்க வேண்டும் என்று குமரி மாநிலங்களவை உறுப்பினர் விசந்தகுமாரிடம் கோரிக்கை வைத்திருந்தோம்.
அவர் இன்று தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 1 கோடி வழங்கியுள்ளார். இந்த நிதியிலிருந்து மருத்துவமனைக்கு தேவையான அனைத்து பொருள்களும் உடனடியாக வாங்கப்படும்" என்றார்.
இதையும் படிங்க: சுற்றித்திருந்த வங்கதேச இளைஞர்: மடக்கிப்பிடித்து மருத்துவமனையில் சேர்த்த காவலர்கள்!