கன்னியாகுமரி: நாகர்கோவில் மாநகராட்சியில் இன்று (ஆக.30) மாதாந்திர மாமன்ற கூட்டம் மேயர் மகேஷ் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 121 தீர்மானங்கள் முன் வைக்கப்பட்டன. இக்கூட்டத்தில் 5ஆவது வார்டு மதிமுக மாமன்ற உறுப்பினர் உதயகுமார் பேசுகையில், “57 கோடியே 57 லட்சம் ரூபாய் மதிப்பீட்டுள்ளான அரசு திட்ட பணிகளுக்கு டெண்டர் விடுவதில் முறைகேடு நடந்து உள்ளது. தமிழ்நாடு அரசால் நாகர்கோவில் மாநகராட்சிக்கு 58 கோடி ரூபாய் சிறப்பு நிதி வழங்கப்பட்டுள்ளது. அதில் ஒப்பந்த புள்ளிக்கோரி மாமன்றத்தில் கோரிக்கை கொண்டுவரப்பட்டது.
ஆனால், மாமன்ற கவுன்சிலர் கூட்டத்தில் இதைப்பற்றி பேச முடியவில்லை. இதற்கு மேயர் முன் அனுமதி வழங்கிவிட்டதால் டெண்டர் முறையாக நடைபெறாமல் டெண்டர் செட் ஆப் செய்யப்பட்டு விட்டது. இதனால் 58 கோடி ரூபாயில் அரசுக்கு சுமார் 11 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. மாநகராட்சியில் கடந்த ஆறு மாதங்களாக வரி போடுவது சம்பந்தமாகவும், வீடு பெயர் மாற்றம் செய்வது சம்பந்தமான மனுக்கள் நிலுவையில் இருக்கிறது. இது தொடர்பாக கடந்த கூட்டத்தில் வலியுறுத்தியும், மாநகராட்சி ஆணையர் மற்றும் உதவி ஆணையர் சார்பில் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை” என குற்றம் சாட்டினார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், “உதவி ஆணையர் மாநகராட்சி அலுவலகத்திற்கு உள்ளே இருந்துகொண்டு மாமன்ற கவுன்சிலிங் கூட்டத்திற்கு வராமல் இருப்பதை சுட்டிக்காட்டி மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக இன்று நான் வெளிநடப்பு செய்கிறேன்” என்றார்.
மேலும், மாநகராட்சி பகுதிகளில் உள்ள வீடுகளை புதுப்பிப்பதற்கும், நகர பகுதிகளில் 3ஆயிரம் புதிய வீடுகள் கட்டுவதற்கும், மாநகராட்சி நிர்வாகம் சார்பில் அனுமதி வழங்கவில்லை எனவும், இது தொடர்பாக பல்வேறு மனுக்கள் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதால் அதிமுக கவுன்சிலர்களும் கூட்டத்தை புறக்கணித்து விட்டு வெளிநடப்பு செய்தனர்.
நாகர்கோவில் மாநகராட்சியின் 52 வார்டுகளில் வளர்ச்சிப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இங்கு நடைபெறும் பணிகள் தரமற்ற முறையில் செய்யப்படுவதாகவும், இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் புகார்கள் கொடுத்தும் இதுவரை எவ்விதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என குற்றச்சாட்டும் எழுந்து வருகிறது.
மேலும், மாநகராட்சிக்கு பொதுமக்கள் பிறப்பு, இறப்பு போன்ற சான்றிதழ்கள் எடுக்க வருகை தரும்போது அங்கு மாநகராட்சி பணியாளர்கள் இருப்பதில்லை எனவும் அவ்வாறு இருந்தாலும் அவர்கள் தங்களை அலைக்கழிப்பதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதையும் படிங்க:போலி ஆவணம் சமர்பித்து பத்திரப்பதிவு; விஜிபி குழுமத்தின் நிர்வாகி மீது வழக்கு!