கன்னியாகுமரி மாவட்டம் சந்தையடி அரசு தொடக்கப்பள்ளியில் தலைமை வாக்குச்சாவடி அலுவலர் ஹேமலதா தலைமையில் தேர்தல் நடைபெற்றது. அப்போது பப்பம்மை என்னும் மூதாட்டி தனது பேரனுடன் வாக்களிக்க சென்றுள்ளார். இந்நிலையில் தனக்கு பார்வைத்திறன் குறைபாடு இருப்பதாக ஹேமலதாவிடம் கூறிய பப்பம்மை, தனக்கு பதில் நீங்கள் தாமரை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.
இதை ஏற்றுக்கொண்ட ஹேமலதா தாமரை சின்னத்திற்கு வாக்களிக்காமல், கை சின்னத்திற்கு வாக்களித்ததாகக் கூறப்படுகிறது. இதை கவனித்த பப்பம்மை மூதாட்டி, தான் கூறிய சின்னத்தில் வாக்களிக்காமல் கை சின்னத்தில் வாக்களித்ததை கவனித்தாக கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இதனையடுத்து அப்பகுதியில் திடீரென பாஜக மற்றும் அதிமுக கட்சியினர் 200க்கும் மேற்பட்டோர் ஒன்று திரண்டு, தேர்தல் அலுவலர் ஹேமலதா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். மேலும், வாக்குச்சாவடியில் மறுதேர்தல் நடத்த வேண்டும் எனக்கூறிய பாஜகவினர், வாக்கு இயந்திரத்தை அங்கிருந்து கொண்டு செல்ல விடாமல் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்த கன்னியாகுமரி டிஎஸ்பி பாஸ்கரன் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதன் பின்னர் போராட்டக்காரர்கள் அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், மறுத்தேர்தல் நடத்தக் கோரியும் மண்டல தேர்தல் அதிகாரியிடம் புகார் மனுவை கொடுத்து விட்டு சென்றனர்.
இந்த சாலை மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் சுமார் மூன்று மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.