கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம், ஈத்தாமொழிப் பகுதியில் தனியார் மருத்துவமனை ஒன்று செயல்பட்டு வருகிறது. அதன் மற்றொரு கிளை மருத்துவமனை நாகர்கோவில் கோட்டார் பகுதியிலும் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், அங்குள்ள ஆம்புலன்ஸ் இரண்டு மருத்துவமனைகளுக்கும் தேவைக்கேற்ப இயக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. நாகர்கோவில் இருளப்பபுரம் பகுதியைச்சேர்ந்த 24 வயதுடைய ஜெருஸ்லின் என்பவர் ஆம்புலன்ஸை இயக்கி வருகிறார்.
இன்று(செப்.11) அதிகாலையில் ஆம்புலன்ஸ் நாகர்கோவிலில் இருந்து ஈத்தாமொழியில் உள்ள மருத்துவமனைக்குச் செல்லும் போது விபத்தில் சிக்கியுள்ளது. அதிகாலை என்பதால் சாலையில் வாகனப்போக்குவரத்து குறைவாக உள்ள நிலையில் வேகமாக சென்று கொண்டிருந்த ஆம்புலன்ஸ் கோவில்விளை பகுதியில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோர பேக்கரி கடை ஒன்றில் மோதி விபத்துக்குள்ளாகியது.
விபத்து குறித்து அப்பகுதியினர் சுசீந்திரம் காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சுசீந்திரம் போலீசார், விபத்தில் சிக்கி உயிரிழந்த ஆம்புலன்ஸ் டிரைவரை மீட்க முடியாததால் தீயணைப்புத்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
அவர்கள் உதவியுடன் ஆம்புலன்சில் உடல்நசுங்கி பலியான ஜெருஸ்சிலின் உடலை மீட்டு, உடல் கூராய்விற்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இவ்விபத்து குறித்து சுசீந்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில் ஆம்புலன்சை ஓட்டி வந்த டிரைவர் ஜெருஸ்லின் குடிபோதையில் இருந்ததாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: நாடு வானில் விமானத்தில் மயங்கி விழுந்த பயணி உயிரிழப்பு