கன்னியாகுமரி: மகளின் திருமணத்தை முன்னிட்டு சொந்த ஊருக்கு கப்பலில் வந்துகொண்டிருந்த தந்தை, கடலில் தவறி விழுந்து காணாமல் போனார்.
நாகர்கோவில் பரதர் தெரு பகுதியை சேர்ந்தவர் ஹரிபால் சேவியர் (60). இவருக்கு சுபா என்ற மனைவியும், இரண்டு மகள்களும் உள்ளனர். இவர் மும்பையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் கப்பலில் மோட்டார் ஆபரேட்டராக பணியாற்றி வருகிறார்.
தனது மகளின் திருமணத்தை முன்னிட்டு, கடந்த மே 14ஆம் தேதி சொந்த ஊருக்கு வருவதற்காக மங்களூரிலிருந்து கொச்சிக்கு கப்பலில் வந்த சேவியர், கடல் சீற்றத்தால் கப்பலிலிருந்து கடலுக்குள் தவறி விழுந்ததாக கூறப்படுகிறது. அவரை அந்த கப்பலில் இருந்தவர்கள் தேடியுள்ளனர். மேலும் இதுகுறித்து அவரது உறவினர்களுக்கும் தகவல் தெரிவித்தனர்.
இந்நிலையில், அவர் காணாமல்போய் இரண்டு நாட்கள் ஆனதால் அவரை தேடும் பணி நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கடலில் விழுந்து காணாமல் போன சேவியரை மத்திய, மாநில அரசுகள் மீட்டுத்தர வேண்டும் என அவர்களது உறவினர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.