கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை ஆர்.சி. தெருவைச் சேர்ந்தவர் வில்லியம் (50). இவர் அதே பகுதியில் உள்ள புனித அந்தோணியார் ஆலயத்தில் பங்கு பேரவை செயலாளராக உள்ளார்.
இவருக்கு முன்னாள் அந்த ஆலயத்தில் பங்கு பேரவை செயலாளராக பணியாற்றிய அலெக்ஸ் என்பவருடன் அவ்வபோது வில்லியமுக்கு வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில், சம்பவத்தன்று இரவு வீட்டிலிருந்த வில்லியத்தை இளைஞர் ஒருவர், தொலைபேசியில் தொடர்புகொண்டு முக்கியமான விஷயம் பேசணும் வெளியே வரும்படி அழைத்துள்ளார். அதை நம்பி வெளியே வந்த வில்லியத்தைத் திடீரென்று ஒன்பது பேர் கொண்ட கும்பல் வழிமறித்து மறைத்துவைத்திருந்த கத்தியால் சரமாரியாகக் குத்தியுள்ளனர்.
இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் கூச்சலிடவே அடையாளம் தெரியாத கும்பல் அங்கிருந்து தப்பியோடியுள்ளது. பின்னர், காயம் அடைந்த வில்லியத்தை மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதித்தனர்.
தற்போது, அந்தத் தாக்குதலின் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை நடத்தினர். இச்சம்பவத்தில் தொடர்புடைய முன்னாள் பங்கு பேரவை செயலாளர் அலெக்ஸ், பாறசாலையைச் சேர்ந்த கூலிப்படைத் தலைவன் சுமன் உள்பட ஒன்பது பேரை காவல் துறையினர் தீவிரமாகத் தேடிவருகின்றனர்.
இதையும் படிங்க: ரயிலில் பெண் தற்கொலை - பயணிகள் அதிர்ச்சி!