குமரி மாவட்டம் அழகப்பபுரத்தைச் சேர்ந்த ஹெப்சிபாய் (28) நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பேராசிரியராகப் பணிபுரிந்துவருகிறார். இவர் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்புதான் பொட்டல்குளம் அருகில் உள்ள சுந்தராபுரம் கிராமத்தில் புதிய வீடு கட்டி குடிபெயர்ந்துள்ளார்.
இவர் தாய், தந்தை மற்றும் தனது ஆறு வயது மகளுடன் அந்த வீட்டில் வசித்துவருகிறார். இந்நிலையில் இவர் நேற்று காலை சுமார் 8.45 மணிக்கு அழகப்பபுரத்திலுள்ள ஒரு ஆலயத்திற்கு ஜெபத்திற்கு குடும்பத்தினருடன் சென்றுவிட்டு, சுமார் 11 மணி அளவில் வீடு திரும்பியுள்ளார்.
வீட்டிற்குள் சென்று பார்த்தபோது உள்புற அறைகளின் கதவு திறந்து கிடந்தது. மேலும் பீரோக்கள் திறந்து கிடந்தன. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் மேலும் உள்ளே சென்று பார்த்தபோது பின்பக்க ஜன்னலை உடைத்து கம்பிகள் அறுக்கப்பட்டிருந்தன.
கொள்ளையர்கள் வீட்டின் பின்பக்கமாக வந்து ஜன்னல் கம்பிகளை கட்டிங் மெஷின் கொண்டு சத்தமில்லாமல் அறுத்து வளைத்துவிட்டு உள்ளே புகுந்த வீட்டிலிருந்த சுமார் 52 பவுன் தங்க நகைகளைத் திருடிச் சென்றது தெரியவந்தது.
இது குறித்து அவர் அஞ்சுகிராமம் காவல் நிலையத்திற்கு கொடுத்த தகவலின் அடிப்படையில் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். அதைத்தொடர்ந்து கைரேகை வல்லுநர்களும் வந்து தடயங்களைச் சேகரித்தனர். மேலும் தனிப்படை காவல் துறையினரும் விசாரணை நடத்தினர்.
இதுபோன்ற கொள்ளைச் சம்பவங்களைத் தடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறார். எனினும் முறையான காவல் ரோந்துப் பணி இல்லாததன் காரணமாக தொடர் திருட்டுச் சம்பவங்கள் மாவட்டத்தில் அரங்கேறிவருகின்றன. இதனால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
இதையும் படிங்க: திருடச் சென்ற வீட்டில் போதையில் அயர்ந்து தூங்கியவர் போலீசில் ஒப்படைப்பு!