கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழியில் மூவேந்தர் நகர், பெருமாள்புரம் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை நடைபெற்று வருவதாக ஆரல்வாய்மொழி காவல் துறைக்கு புகார்கள் வந்த வண்ணம் இருந்துள்ளது.
இதையடுத்து, ஆரல்வாய்மொழி காவல் துறையினர் அப்பகுதிகளில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் இன்று (ஆக.11), ஆரல்வாய்மொழி சந்திப்பு பகுதி வழியாக சந்தேகதிற்கிடமான வகையில் வந்த ஆட்டோவை நிறுத்தி காவல் துறையினர் சோதனை மேற்கொண்டதில் ஒரு கிலோ 250 எடை கொண்ட கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரியவந்தது.
உடனடியாக ஆட்டோவில் வந்த மூவரையும் காவல் துறையினர் பிடிக்க முயன்றனர். அதில், ஒருவர் காவல் துறையினரிடமிருந்து தப்பியோடியுள்ளார்.
பின்னர், மீதமுள்ள இருவரையும் கைது செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அதில், இவர்கள் கேசவன்புதூர் பகுதியை சேர்ந்த ரதீஷ், திட்டுவிளை பகுதியை சேர்ந்த மனோஜ் என்பது தெரியவந்தது.
காவல் துறை பிடியிலிருந்து தப்பியோடிய சுதன் என்ற நபரையும் தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும், அவர்களிடமிருந்து கஞ்சா பொட்டலங்களையும், ஆட்டோவையும் பறிமுதல் செய்தனர்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.