கன்னியாகுமரி அருகே மலைக்கிராமத்தைச் சேர்ந்த 17 வயது மாணவி ஒருவர் தனியார் கல்லூரி படித்து வந்தார். மாணவியின் குடும்ப சூழ்நிலை காரணமாக, படிப்பை தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், ராஜேஷ் என்பவர் நடத்தி வந்த தனியார் நிதி நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்துள்ளார்.
ராணி குரூப்ஸ் என்ற பெயரில் பல இடங்களில் இவரது நிதி நிறுவனம் இயங்கி வருகிறது. சம்பத்தன்று மழை பெய்து கொண்டிருந்த போது, இரவில் சிறுமி வேலைப்பார்த்த நிதி நிறுவனத்தில் வைத்து ராஜேஷ் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனையடுத்து, அங்கிருந்து தப்பித்து வீட்டிற்கு சென்ற சிறுமி நடந்தவற்றை பெற்றோரிடம் அழுதுகொண்டே கூறியுள்ளார்.
நிதி நிறுவன அதிபர் மீது போக்சோ வழக்கு: இதைக் கேட்ட பெற்றோர் அதிர்ச்சியடைந்த நிலையில், சிறுமியின் தாயார் மகளிர் காவல் நிலையத்தில் கடந்த நவ.5 ஆம் தேதி புகார் அளித்துள்ளார். இதைத்தொடர்ந்து இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த புகாரின் அடிப்படையில், போலீசார் விசாரணை மேற்கொண்டு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நிதி நிறுவன அதிபர் ராஜேஷ் மீது போக்சோ சட்டப் பிரிவில் நவ.7ஆம் தேதி வழக்கு பதிவு செய்துள்ளனர்.
போலீசார் வலைவீச்சு: இதனை அறிந்த ராகேஷ் தலைமறைவாகிய நிலையில், அவரை காவல்துறையினர் வலைவீசித் தேடிவருகின்றனர். நிதி நிறுவனத்தில் பணியாற்றிய மாணவிக்கு நிதி நிறுவன அதிபரே பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரியில் அதிகரிக்கும் பாலியல் குற்றங்கள்: கன்னியாகுமரி மாவட்டத்தில் தற்போது பாலியல் ரீதியான புகார்கள் காவல் நிலையங்களில் குவிந்த வண்ணம் உள்ளன. தனியார் மருத்துவக் கல்லூரியில் பாலியல் தொல்லை காரணமாக, தூத்துக்குடி சேர்ந்த மாணவி ஒருவர் பலியானார். இச்சம்பவம் குமரி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த பரபரப்பு அடங்குவதற்குள், அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரியில் உடன் பணிபுரிந்த பெண் மருத்துவருக்கு பாலியல் தொல்லை அளித்ததாக மருத்துவர் கைது செய்யப்பட்டார்.
அதனைத்தொடர்ந்து, அந்த அரசு கல்லூரியில் மாணவிகளிடம் தொடர் பாலியல் தொல்லையில் ஈடுபட்ட பணியாளர் ஒருவர் கைது செய்யப்பட்டார். இதைப் போன்று அரசு அலுவலகங்களில் பணிபுரியும் பெண்கள் மேல், சக அதிகாரிகளால் பாலியல் தொந்தரவுக்கு ஆளாகி வருகின்றனர். மேலும், பல்வேறு வர்த்தக நிறுவனங்களில் பணிபுரிந்து வரும் பெண்களும் பாலியல் தொந்தரவு காரணமாக, பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்டம் மலைக்கிராமத்தை சேர்ந்த 17 வயது மாணவி ஒருவர் பாலியல் தொந்தரவுக்கு ஆளாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: தீபாவளியையொட்டி தமிழகத்தில் ரூ.467 கோடிக்கு மது விற்பனை - டாஸ்மாக் நிர்வாகம் தகவல்!