குமரி மாவட்ட ஆட்சியர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “குமரி மாவட்டத்தில் இதுவரை முகக்கவசம் அணிதல், தகுந்த இடைவெளியைக் கடைப்பிடித்தல் உள்ளிட்ட அரசு விதிகளை மீறிய 14 ஆயிரத்து 572 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் 22 லட்சத்து 37 ஆயிரத்து 200 ரூபாய் வசூலாகியுள்ளது. இதுவரை மாவட்டத்தில், மொத்தம் 2 லட்சத்து 50 ஆயிரத்து 852 பேருக்கு கரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.
ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, கோவிட் கவனிப்பு மையங்கள், தனியார் மருத்துவமனை, வீடுகளில் 136 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
இதற்கிடையில், நேற்று 18 பேர் குணமடைந்து வீடு திரும்பினார். குமரி மாவட்டத்தில் கரோனா பாதிப்பு தற்போது கட்டுக்குள் இருந்தாலும் வடகிழக்கு பருவமழை தொடங்கி இருப்பதாலும், விழாக்காலங்கள் தொடர்ந்து வருவதாலும் பொதுமக்கள் அவசியமின்றி பொது இடங்களுக்கு வருவதைத் தவிர்க்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.