காஞ்சிபுரம்: அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான ஜெ. ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு இரட்டைத் தலைமை தொடர்பான சிக்கல் எழுந்த நிலையில் பொதுச்செயலாளர் யார் என்பதில் கடும்போட்டி நிலவி வருகிறது.
இதன் காரணமாக எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் இருவரும் தனித்தனியே இரு அணிகளாக பிரிந்து எடப்பாடி பழனிசாமி தலைமையில் பொதுக்குழுவானது கூட்டப்பட்டு, ஓ.பன்னீர் செல்வம் உள்பட அவரது ஆதவாளர்களையும் கட்சியிலிருந்து நீக்கி இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி கே. பழனிசாமி நியமிக்கப்பட்டார். இந்த பொதுக்குழு செல்லாது என ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் வழக்கானது தொடரப்பட்டு அவ்வழக்கானது நிலுவையில் இருந்து வருகிறது.
இந்நிலையில், கோயில் நகரமான காஞ்சிபுரத்தில் வழக்குகளைத் தீர்த்து வைக்கும் தலமாக விளங்குகின்ற பிரசித்திபெற்ற வழக்கறுத்தீஸ்வரர் திருக்கோயிலில், எடப்பாடி பழனிசாமி வழக்கிலிருந்து விடுபட்டு பொதுச்செயலாளர் ஆக வேண்டியும், அதிமுக எல்லா விதமான பலமும் பெற்று எதிர்வரும் தேர்தல்களில் அமோக வெற்றி பெற வேண்டும் என்றும்;
தமிழ்நாட்டில் மீண்டும் எடப்பாடி பழனிசாமி ஆட்சி அமைந்திட வேண்டியும், அதிமுக அண்ணா தொழிற்சங்க பேரவை மாநிலத் தலைவர் தாடி மா.ராசு தலைமையில் சிறப்பு யாகம் வளர்க்கப்பட்டு சிறப்பு பிரார்த்தனை செய்யப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து அன்னபிரசாதங்களும் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் அதிமுக முன்னாள் அமைச்சரும் காஞ்சிபுரம் மாவட்டச்செயலாளருமான வி.சோமசுந்தரம், அதிமுக அமைப்புச்செயலாளரும், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான வாலாஜாபாத் பா. கணேசன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் காஞ்சி பன்னீர்செல்வம் உள்ளிட்ட அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் பங்கேற்றனர்.
ஏற்கெனவே மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெலலிதாவிற்கு மிகுந்த நம்பிக்கைக்குரிய கோயிலாக இக்கோயில் திகழ்ந்ததும், சொத்துக்குவிப்பு வழக்கிலிருந்து விடுபட வேண்டி ஜெயலலிதாவே இக்கோயிலில் நேரடியாக வருகை புரிந்து சாமி தரிசனம் மேற்கொண்டதும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மக்கள் இயக்க நிர்வாகிகள் உடன் நடிகர் விஜய் சந்திப்பு!