உலகளவில் பட்டுப் புடவைகளுக்குப் பெயர்போன நகரம், காஞ்சிபுரம். மேலும் கோயில்கள் அதிகமாக இருப்பதால் நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் காஞ்சிபுரத்திற்கு வருகை புரிகின்றனர். குறிப்பாக வரதராஜப் பெருமாள், காமாட்சியம்மன் உள்ளிட்ட பிரசித்தி பெற்ற கோயில்கள் உள்ளன. காஞ்சிபுரத்தில் காந்தி ரோடு, நான்கு ராஜவீதிகள், காமராஜர் சாலை, ரயில்வே சாலை உள்ளிட்டவற்றை பொதுமக்கள் பிரதானமாகப் பயன்படுத்துகின்றனர்.
இந்தச் சாலைகளில் வாகன நிறுத்துமிடம் இல்லாததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. நாளுக்கு நாள் நகரில் வாகனங்கள் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கின்றனர். தற்போது காஞ்சிபுரத்தில் 'பிரஷாத்' திட்டத்தில் வாகனங்கள் நிறுத்துமிடமும், யாத்திரி நிவாஸ் திட்டத்தில் பக்தர்களுக்கு தங்கும் அறைகளும் கட்டப்பட்டு வருகின்றன. இத்திட்டத்தை மாவட்ட நிர்வாகம் விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
அதேபோன்று சுற்றுலாத் தலமான கொடைக்கானலுக்கு, கடந்த ஆண்டு மட்டும் 80 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வந்தனர். அவர்கள் வாகனங்கள் நிறுத்துமிடம் இல்லாததால், சாலைகளிலேயே தங்களது வாகனங்களை நிறுத்திச் சென்றனர். இதனால் மற்ற வாகனங்கள் அவ்வழியாக செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதுமட்டுமின்றி உள்ளூர்வாசிகளும் தங்களது வாகனங்களை சாலைகளில் ஆங்காங்கே நிறுத்தி விடுகின்றனர். இதற்குக் காரணம் வாகன நிறுத்துமிடங்களை சிலர் ஆக்கிரமித்துள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
வாகன நெரிசலால் ஆம்புலன்ஸ் வாகனங்கள் கூட செல்ல முடியவில்லை. கொடைக்கானலில் இரண்டு வாகன நிறுத்துமிடங்கள் மட்டுமே உள்ளன. இங்கும் 10 முதல் 20 வாகனங்கள் மட்டுமே நிறுத்த முடியும். சீசன் காலங்களில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர்.
வாகனங்கள் நிறுத்துமிடப் பிரச்னையால், கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் உடனே ஊர் திரும்புகின்றனர். போக்குவரத்துக் காவல் துறையினர் சாலைகளில் இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்களின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கின்றனர்.
இதுதொடர்பாக கொடைக்கானல் சார் ஆட்சியர் சிவகுரு பிரபாகரன், காவல் துணை கண்காணிப்பாளர் ஆத்மநாதன், நகராட்சி ஆணையர் நாராயணன் ஆகியோர் விரைவில் வாகனங்கள் நிறுத்துமிடம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: கரோனாவால் அதிக கட்டணம் வசூல் செய்யும் ஆட்டோ ஓட்டுநர்கள்