காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரிலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் காஞ்சிபுரம் மாவட்ட தேமுதிக சார்பில், காஞ்சிபுரம், உத்திரமேரூர், மதுராந்தகம் ஆகிய மூன்று தொகுதிகளின் வாக்குச்சாவடி முகவர்கள், செயல்வீரர்கள் கூட்டம் இன்று(பிப்ரவரி 14) நடைபெற்றது. இதில், தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்துகொண்டு வருகிற தேர்தலில் மேற்கொள்ளப்படவேண்டிய பணிகள் குறித்த ஆலோசனைகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.
அப்போது, பெண்கள் முடிவெடுத்தால் தமிழ்நாட்டில் நிச்சயம் மாற்றத்தை ஏற்படுத்தலாம் என்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேர்தல் கூட்டணி குறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த், செயற்குழு, பொதுக்குழுவை கூட்டி நல்ல அறிவிப்பை அறிவித்தபின்பு தேர்தலைச் சந்திக்கவுள்ளதாகத் தெரிவித்தார். விஜய்பிரபாகரன் தேர்தலில் போட்டியிடுவரா என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர்தான் விஜயபிரபாகரன் போட்டியிடுவரா இல்லையா என்பது தெரியவரும் என பதிலளித்தார்.
தொடர்ந்து, தேர்தல் கூட்டணி குறித்து விஜயகாந்த் செயற்குழு, பொதுக்குழுவை கூட்டி முடிவெடுப்பார் எனத் தெரிவித்த அவர், இறுதிக்கட்ட பரப்புரையில் விஜயகாந்த் பங்கேற்பார் எனவும், தமிழ்நாட்டில் எத்தனையோ தேர்தல்களில் தேமுதிக தனித்துப் போட்டியிட்டுள்ளது எனவும் தெரிவித்தார். தேர்தல் களத்திற்கு வரும்போது தெளிவான முடிவோடு வரவேண்டும் என்பதற்காகவே காத்திருப்பதாகவும் அவர் கூறினார்.
இதையும் படிங்க: ஷோ காட்ட பிரதமர் வந்திருக்கிறார்: ஸ்டாலின்