தமிழ்நாடு முழுவதும் 67 ஆயிரத்து 687 வாக்குச்சாவடிகளில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல், முகவரி மாற்றம் உள்ளிட்ட திருத்தங்களை மேற்கொள்வதற்கான முதல்கட்ட சிறப்பு முகாம் ஜனவரி 4, 5ஆம் தேதிகளில் நடைபெறும் என தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரத சாகு அறிவித்திருந்தார்.
வரைவு வாக்காளர் பட்டியல் வெளியானதைத் தொடர்ந்து, வாக்காளர்கள் வரும் ஜனவரி 22ஆம் தேதிவரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம் உள்ளிட்ட திருத்தங்களைச் செய்துகொள்ளலாம். இதற்கான வாக்காளர் பட்டியல் சுருக்கமுறை திருத்தப்பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
இதில் முதல்கட்ட முகாம் ஜனவரி 4, 5ஆம் தேதி தமிழ்நாட்டில் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் நடைபெறவுள்ளது. குறிப்பாக காஞ்சிபுரத்திலுள்ள தியாகி நடுநிலைப்பள்ளியில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா தொடங்கிவைத்தார்.
இதனடிப்படையில் இந்த முகாமில் 18 வயது நிறைவடைந்தவர்கள் படிவம் 6, ஆவணங்களைச் சமர்ப்பித்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தலுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவித்த நிலையில், புதிய இளம் வாக்காளர்கள் படிவத்தை பெற்று பூர்த்தி செய்துஅளித்தனர்.
இதுதவிர, வெளிநாடுவாழ் இந்தியர்கள் 6ஏ படிவத்தை சமர்ப்பித்து பெயர் சேர்க்கலாம். படிவம் 7 சமர்ப்பித்து பெயர் நீக்கம் செய்ய விண்ணப்பிக்கலாம். இதுதவிர, தொகுதிவிட்டு தொகுதி மாற்றம், ஒரு தொகுதிக்குள்ளேயே முகவரி மாற்றத்துக்கு படிவம் 8, 8ஏ ஆகிய படிவங்களைச் சமர்ப்பித்து திருத்தம் செய்துகொள்ளலாம் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுதவிர தாலுகா அலுவலகங்கள், வாக்காளர் பதிவு அலுவலர் ஆகியோரிடமும் மனுக்களை சமர்ப்பித்து வாக்காளர் பட்டியலில் திருத்தங்களை மேற்கொள்ளலாம்.
இதைத்தொடர்ந்து, அடுத்தவாரம் சனி, ஞாயிற்றுக்கிழமைகள் வாக்காளர் திருத்த முகாம் நடைபெறுகிறது. இந்த முகாம்களில் பெறப்படும் மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு, பிப்ரவரி மாதம் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:களைகட்டும் கோவை விழா - கலக்க காத்திருக்கும் இயற்கை விசைப்படகுகள்!