காஞ்சிபுரம்: ஏனாத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் ஆரோக்கிய அருண். இவர் காஞ்சிபுரம் போக்குவரத்துக் காவல் பிரிவில் காவலராக பணிபுரிந்து வருகிறார். இவர், தன்னிடம் முதலீடு செய்தால் 1 லட்ச ரூபாய்க்கு மாதம் 30 ஆயிரம் வட்டி அளிப்பதாக ஆசை வார்த்தைகள் கூறி பலரிடம் பணம் பெற்றுள்ளதாகத் தெரியவந்துள்ளது. மேலும் உடன் பணிபுரியும் காவலர்கள் சுமார் 80-க்கும் மேற்பட்டோரிடமும் பொதுமக்களிடமும் கோடிக்கணக்கான பணத்தை ஆரோக்கிய அருண் இவ்வாறு வசூல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சிலருக்கு 2022 ஆம் ஆண்டு வரை மாதந்தோறும் ஒரு குறிப்பிட்ட தொகையை அளித்து வந்த ஆரோக்கிய அருண் அதன் பிறகு யாருக்கும் எந்த பணத்தையும் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் முதலீடு செய்த போக்குவரத்து காவலர்கள், சட்டம் ஒழுங்கு காவலர்கள், சில ஆய்வாளர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் செய்வதறியாது, திருடனுக்கு தேள் கொட்டிய கதியாக விழித்துக் கொண்டுள்ளனர்.
இதுகுறித்து செய்திகள் கசிந்து புகார் எழுந்த நிலையில், கடந்த வருடம் (2022) நவம்பர் மாதம், மாவட்ட தனிப்படையினர் மற்றும் விஷ்ணுகாஞ்சி போலீசார் ஆரோக்கிய அருண் மற்றும் அவரது சகோதரர்களிடம் தீவிர விசாரணை நடத்தியதாகத் தெரிகிறது. இந்நிலையில் தற்போது ஆரோக்கிய அருண் தனது மனைவி மகாலட்சுமியுடன் தலைமறைவாகிட்டார்.
இதனையடுத்து ஆரோக்கிய அருணின் தாய் மரிய செல்வி, மாமல்லபுரம் காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பணிபுரியும் இவருடைய அண்ணன் சகாய பாரத், அவருடைய மனைவி சௌமியா, ஆரோக்கிய அருணின் இளைய சகோதரர் இருதயராஜ், அவருடைய மனைவி ஜெயஸ்ரீ ஆகிய ஐவரையும் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் நேற்று இரவு கைது செய்துள்ளனர்.
மேலும் மனைவியுடன் தலைமறைவாகியுள்ள ஆரோக்கிய அருணை போலீசார் தேடி வரும் நிலையில், தன்னிடம் முதலீடு செய்த சில காவல்துறையினரிடம் ஆரோக்கிய அருண் கான்பரன்ஸ் காலில் பேசும் ஆடியோ வெளியாகி தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில் பேசும் ஆரோக்கிய அருண், "தான் பெயருக்குத்தான் யூனிபார்ம் போட்டுக்கொண்டு காவல்துறையில் பணி புரிவதாகவும், 200 கோடி ரூபாய் அளவில் வியாபாரம் செய்து வந்ததாகவும் கெத்தாகத் தெரிவிக்கிறார்.
மேலும், தான் காவல்துறையில் கடைசி வரையில் பணிபுரிந்தாலும் ஒன்றரை கோடி ரூபாய் தான் சம்பாதிக்க முடியும் என்றும் கூறுகிறார். தனக்கு 20 சதவீதம் மாத வட்டி வரும்போது அனைவருக்கும் 18 முதல் 15 சதவிகிதம் வட்டி கொடுத்ததாகவும் தனக்கு 15 சதவீதம் வட்டி வரும்போது 10% என்று அதை மாற்றி அமைத்ததாகவும் அவர் தெரிவிக்கிறார். இன்னும் ஒரு ஆறு மாத காலத்திற்கு 10 சதவிகித வட்டி மட்டும்தான் அனைவருக்கும் கொடுக்க முடியும் எனவும், பொருளாதார குற்றப்பிரிவினரும் வருமான வரித்துறையினரும் தனக்கு ஏகமாகக் குடைச்சல் கொடுப்பதால், ஒரு செக்கை மாற்றவே தன்னால் இயலவில்லை" என்றும் அந்த ஆடியோவில் சரமாரியாக அடித்து விடுகிறார் ஆரோக்கிய அருண்.
இவர் முதலீடு செய்த இடத்தில் அனைவருக்கும் 10% வட்டி மட்டுமே கொடுக்கும் படியும், அசலை 6 மாதங்களுக்குக் கொடுக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளதாகவும், அதனால் தனக்கு நட்டம் ஏற்பட்டாலும் பரவாயில்லை என்று அனைவருக்கும் 10 சதவீதம் தொடர்ந்து பெரிய மனதோடு அளிக்க முன் வந்துள்ளதாகவும் ஆரோக்கிய அருண் தெரிவிக்கிறார்.
ஏற்கனவே ஆருத்ரா, ஐஎஃப்எஸ் போன்ற நிறுவனங்கள் பொதுமக்களிடம் பணத்தை சுருட்டிக் கொண்டு பட்டை நாமம் போட்டு வந்த நிலையில், காவல்துறையில் பணிபுரியும் ஒரு காவலரே தனது சகோதரர்களுடன் சேர்ந்து கொண்டு, பொதுமக்கள் மட்டுமல்லாது வங்கி ஊழியர்கள், உடன் பணிபுரியும் காவலர்கள் ஆகியவரிடம் மோசடி செய்து பணத்தைப் பெற்றுக் கொண்டு, கெத்தாக கான்ஃபரன்ஸ் காலில் பேசி சமாதானப்படுத்தும் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் போலீசாரின் விசாரணையில் ட்ரீம் லெவன் உள்ளிட்ட ஆன்லைன் சூதாட்டங்களில் அதீத ஆர்வமுள்ளவர் ஆரோக்கிய அருண் என்பதும் தெரியவந்துள்ளது. தனது தாய், சகோதரர்கள், சகோதரிகளின் மனைவிகள் உள்ளிட்ட 5 பேரை கம்பி எண்ண வைத்துவிட்டு, மனைவியுடன் எஸ்கேப்பான ஆரோக்கிய அருண் எப்போது பிடிபடுவார் என்பதே பாதிக்கப்பட்டவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.