காஞ்சிபுரம்: அத்திவரதர் புகழ்பெற்ற ஸ்ரீவரதராஜப் பெருமாள் திருக்கோயிலில் நேற்று(ஜனவரி 1) எட்டாம் நாள் ராப்பத்து உற்சவம் நடைபெற்றது. இந்நிகழ்வில், வரதராஜ பெருமாள் கோயிலில் தென்கலைப் பிரிவினர் மாமுனிவர் பாசுரம் பிரபந்தமும், வடகலைப் பிரிவினர் மாமுனிவர் பிரபந்தம் மூன்றாவது வரியில் இருந்து தொடங்கலாம் என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
மேலும், தென்கலைப் பிரிவினர் பாடும்போது வடகலைப்பிரிவினர் வேறு பாடல்கள் பாடக்கூடாது எனவும் உத்தரவில் தெரிவித்திருந்தது. ஆனால், நேற்று முன்தினம் நடைபெற்ற நிகழ்வில் தென்கலைப்பிரிவினர் மாமுனிவர் பாசுரம் பிரபந்தம் பாடும்போது வடகலைப்பிரிவினர் பிரபந்தம் பாடமுயற்சித்தபோது இருவருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது.
இந்த மோதலால், நேற்று நடைபெற்ற உற்சவத்தில் இந்து சமய அறநிலையத்துறை இணை அலுவலர் தியாகராஜன், வருவாய் கோட்டாட்சியர் ஸ்ரீவித்யா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிமேகலை இருதரப்பினரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது, நீதிமன்ற தீர்ப்பை நடைமுறைப்படுத்த தென்கலை பிரிவினர் வலியுறுத்தினர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வடகலைப் பிரிவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், கோயிலில் பதற்றம் ஏற்பட்டு சாமி புறப்பாடு நிறுத்தப்பட்டது. இறுதிக்கட்ட பேச்சுவார்த்தையின்போது காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோயிலில் பூஜைகள் மட்டுமே மேற்கொள்ளவேண்டுமே தவிர வடகலை, தென்கலை இருதரப்பினரும் எவ்வித வாதங்களையும் கோயிலில் மேற்கொள்ளக்கூடாது என இந்துசமய அறநிலையத்துறை அறிவித்து அதன்படி செயல்பட அறிவுறுத்தியுள்ளது. இதை மீறுவோர் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டது.
இதையும் படிங்க: வடகலையா... தென்கலையா... ஐயங்கார்களுக்கிடையே தொடரும் சிக்கல்! பக்தர்கள் கவலை