காஞ்சிபுரம் நகர பகுதியில் அடிக்கடி இருசக்கர வாகனம் திருட்டு நடைபெறுவதாக காவல் துறையினருக்குத் தொடர்ந்து புகார் வந்தது. இதனையடுத்து சங்கரமடம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ரகசிய கண்காணிப்பில், காவல் துறையினர் ஈடுபட்டனர்.
அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் சுற்றித் திரிந்த ஒருவரைப் பிடித்து விசாரித்ததில், அவர் முன்னுக்குப் பின் முரணாக காவல் துறையினரிடம் பதில் அளித்துள்ளார். இதைத்தொடர்ந்து அவரை காவல் நிலையம் அழைத்துச் சென்று தீவிர விசாரணை நடத்தினர்.
விசாரணையில், அவர் வேலூர் மாவட்டம் சின்ன அல்லாபுரம் பகுதியைச் சேர்ந்த சசிகுமார் என்பதும், காஞ்சிபுரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 6 இருசக்கர வாகனங்களையும், வேலூர் பகுதியில் 2 இருசக்கர வாகனங்களையும் திருடியது தெரியவந்தது.
பிறகு காவல் துறையினர் சசிகுமார் மீது வழக்குப்பதிவு செய்து, கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் அவரிடமிருந்து 8 இருசக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.