காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த பனப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் ரவிக்குமார். இவர் நேற்று முன்தினம் (ஏப். 13) இரவு ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளார். அப்போது, தனது இருசக்கர வாகனத்தை விடுதியின் நுழைவாயிலில் நிறுத்தியுள்ளார்.
பின்னர் நேற்று (ஏப். 14) காலை 9 மணி அளவில் அறையை காலிசெய்து விட்டு தன்னுடைய இருசக்கர வாகனத்தை எடுத்துச்செல்ல வந்துள்ளார். அப்போது, இருசக்கர வாகனம் அங்கு இல்லாததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக விடுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ரவிக்குமார் ஆய்வுசெய்தார்.
அதில், அதிகாலை 3.30 மணி அளவில் இளைஞர் ஒருவர் விடுதியின் உள்ளே நுழைந்து சிசிடிவி கேமராவை மேல் பக்கமாகத் திருப்பிவிட்டு பின்னர் இருசக்கர வாகனத்தைத் திருடிச் சென்றது தெரியவந்தது. பின்னர் ரவிக்குமார் சிசிடிவி காட்சிகளுடன் இது தொடர்பாக ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதனப்படையில், வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் சிசிடிவி காட்சி உதவியுடன் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். மேலும் தனியார் தங்கும் விடுதியில் இருசக்கர வாகனம் திருடுபோன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: ஈரோடு அருகே 95 வயது மூதாட்டி வெட்டிப் படுகொலை; பேரன் கைது!