தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மறைமலைநகர், தமிழ்நாடு ஒருங்கிணைந்த கழிவு மேலாண்மை கூட்டமைப்பு மற்றும் மகேந்திரா நிறுவனம் ஆகிய மூன்றும் இணைந்து பசுமையை பாதுகாத்து பூமி வெப்பமாதலை தடுக்கும் நோக்கில் பல்வேறு பகுதிகளில் மரக்கன்றுகளை நட்டு வருகின்றன.
இதற்கு முன் பல்வேறு பகுதிகளில் 1000 மரக்கன்றுகளை நடவுசெய்த இவர்கள் தற்போது செங்கல்பட்டு குண்டூரில் அமைந்துள்ள அறிஞர் அண்ணா அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் உதவியுடன் 200 மரக்கன்றுகளை அப்பள்ளி வளாகத்தில் நட்டனர். மேலும் ஒரு மரத்திற்கு மூன்று மாணவிகள் வீதம் 200 மரக்கன்றுகளை 600 மாணவிகள் கொண்டு நடவுசெய்யப்பட்டது.
”இங்கு நடப்பட்ட ஒவ்வொரு மரத்திற்கும் அதனை நடவு செய்த மூன்று மாணவிகளின் பெயர் பதித்த பாதாகைகள் வைக்கப்படும். அவர்கள் பள்ளிபடிப்பு முடியும் வரை அந்தந்த மரக்கன்றுகளை பேணிக்காப்பது தங்களின் கடமையாக கருத வேண்டும்" என்று மாணவிகளை பள்ளி தலைமை ஆசிரியர், மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், ஒருங்கிணைந்த கழிவு மேலாண்மை கூட்டமைப்பினர், மகேந்திரா நிறுவனத்தின் அதிகாரிகள் ஆகியோர் கேட்டுக்கொண்டனர்.
மேலும் பள்ளிக்கு அருகிலுள்ள குண்டூர் ஏரியில் எதிர்காலத்தில் 1000 மரங்களும்,ஏரிக்கரை மீது சாலையும், மாவட்ட ஆட்சியரிடம் அனுமதிப்பெற்று அமைத்துத்தரப்படும் என வாக்குறுதி அளித்தனர்.
இந்நிகழ்வில் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர், மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் வாசுதேவன், தமிழ்நாடு ஒருங்கிணைந்த கழிவு மேலாண்மை கூட்டமைப்பு சேர்ந்த டாக்டர்.சங்கர், மகேந்திர நிறுவன மேலாளர்கள் ராதாகிருஷ்ணன், சங்கரன் குட்டி, பள்ளி தலைமை ஆசிரியர் அருணா, இதர ஆசிரியர்கள் மற்றும் மாணவிகள் கலந்துகொண்டனர்.