காஞ்சிபுரம் அடுத்த ராஜகுளத்தைச் சேர்ந்தவர், சிவஞானம்(56). அப்பகுதியில் மளிகைக்கடை நடத்தி வருகிறார். இதனிடையே இவருக்கும் இவரது பக்கத்துக்கடையில் துரித உணவகம் நடத்திவரும் சரவணன்(32) என்பவருக்கும் சில ஆண்டுகளாக இடம்தொடர்பாக பிரச்னை இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று (ஆக.8) இரவு கடையிலிருந்து வீடு திரும்பிய சிவஞானத்தை, சரவணன் அவரது நண்பர்களான சிட்டியம்பாக்கத்தைச் சேர்ந்த மணிகண்டன்(23), ஆபேல்(24) ஆகியோருடன் வழிமறித்து கத்தியால் சரமாரியாக வெட்டிப்படுகொலை செய்தார்.
இது தொடர்பாக காஞ்சிபுரம் தாலுகா காவல் நிலையத்திற்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்ததன்பேரில், சம்பவ இடத்திலிருந்த அவரது உடலைக்கைப்பற்றி காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பினர். இதுகுறித்து அவரது மனைவி சாந்தி அளித்த புகாரின்பேரில், வழக்குப்பதிவு செய்து மூன்று பேரையும் அப்பகுதியில் வலைவீசித்தேடினர். அப்போது முட்புதரில் பதுங்கி ஒளிந்து கொண்டிருந்த மூவரையும் போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.
முன்னதாக, கைதான மூவர் மீதும் ஏற்கெனவே, தாலுகா காவல் நிலையத்தில் குற்ற வழக்குகள் உள்ளது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இக்கொலை சம்பவம் நடைபெற்று ஒரு மணி நேரத்தில் காஞ்சி தாலுகா போலீசார் விரைந்து குற்றவாளிகளைக் கண்டறிந்து கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: Video:மாலை மரியாதையுடன் பன்றிகளை ஊர்வலமாக அழைத்துச்செல்லும் விநோத வழிபாடு