காஞ்சிபுரம்: பொன்னேரி கரை தமிழ்நாடு போக்குவரத்து தொழிலாளர் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர்கள் சுந்தர்- முருகம்மாள் தம்பதியினர். இவர்களது இளைய மகன் கணேஷ் (25) சிவில் டிப்ளமா படித்துவிட்டு தனியார் தொழிற்சாலையில் பணியாற்றிவருகிறார்.
சிறுவயது முதலே ஓவியம் வரைவதில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்த கணேஷ் தனது நண்பர்கள், உறவினர்கள், அக்கம்பக்கத்தினருக்கு ஓவியம் வரைந்து கொடுப்பார்.
சார்கோல் ஆர்டிஸ்ட் கணேஷ்
இந்நிலையில் ஓவியத்தின் மீது உள்ள தனியாத தாகத்தால் பணி முடிந்து ஓய்வு நேரங்களில் தொடர்ந்து சார்கோல் ஆர்டிஸ்ட் எனும் பென்சில் வரைவு ஓவியங்களை வரைந்து வந்துள்ளார்.
அவ்வகையில் தமிழ் திரைப்பட பிரபலங்களாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், சூர்யா, இசைஞானி இளையராஜா, மறைந்த பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், புத்தர் போன்றோரின் ஓவியங்களை மிகவும் தத்ரூபமாகவும், கலைநயமிக்கமாகவும் வரைந்து அசத்தியுள்ளார். அவ்வாறு தான் வரையும் ஓவியங்களை தனது சமூக வலைத்தளப் பக்கங்களில் பதிவேற்றம் செய்கிறார்.
தமிழ் எழுத்துக்களால் வள்ளுவர்
இந்தநிலையில், இளைஞர் கணேஷ் தமிழ் எழுத்துக்கள் 247, தமிழ் வட்டெழுத்துக்கள், தமிழி எழுத்துக்கள் உள்ளிட்ட 741 எழுத்துக்களால் தெய்வப்புலவர் திருவள்ளுவரின் உருவத்தை அழகான ஓவியமாக வரைந்து உள்ளார்.
இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவேற்றம் செய்து முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பகிர்ந்து உள்ளார். இதைக் கண்ட முதலமைச்சர், " அன்பின் வழியது உயர்நிலை" என்ற அய்யன் வள்ளுவரை, தமிழ் மீது கொண்ட அன்பால் தமிழ் எழுத்துக்களால் ஓவியக் காவியமாக்கிய கணேஷை எவ்வளவு பாராட்டினாலும் தகும். வள்ளுவம் போல் இந்த ஓவியமும் வாழும்! என வாழ்த்திப் பதிவிட்டுள்ளார்.
முதலமைச்சர் பாராட்டியது மிகுந்த நெகழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக கணேஷ் தெரிவித்தார். தமிழ் அறிஞர்கள், ஆர்வலர்கள், பொதுமக்கள் என அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
தற்போது வாழ்வாதாரத்திற்காக தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்தாலும், தனது ஓவியத் திறமைக்கு ஏற்றார் போல கலைத்துறை தொடர்புடைய பணியினை தமிழ்நாடு அரசு வழங்க வேண்டுமென கணேஷ் கோரிக்கை வைத்துள்ளார்.
இதையும் படிங்க: TNPL 2021: திண்டுக்கல்லை வாரி சுருட்டியது மதுரை