காஞ்சிபுரம்: ஶ்ரீபெரும்புதூர் அடுத்த மணிமங்கலம் அம்மாணம்பாக்கத்தைச்சேர்ந்தவர் குமரேசன்(35). சொந்தமாக தொழில் செய்து வருகிறார்.
நேற்று முன்தினம் தனது சொந்த ஊரான தூத்துக்குடியில் உறவினர் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக குடும்பத்துடன் சென்றுள்ளார். இந்நிலையில் நேற்று(ஜூன் 21) காலை அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக குமரேசனிடம் தொடர்புகொண்டு, அது குறித்து தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து உடனடியாக இன்று(ஜூன் 22) காலை வீடு திரும்பிய குமரேசன் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைக்கப்பட்டிருந்த இருபதாயிரம் ரூபாய் ரொக்கப்பணம் திருடு போனது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து மணிமங்கலம் காவல் துறையினருக்குத் தகவல் அளிக்கப்பட்ட நிலையில் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அப்போது சுவற்றின் மீது ஏறி வீட்டினுள் குதித்து திருட்டுச்சம்பவத்தில் இருவர் ஈடுபட்டது சிசிடிவியில் பதிவாகியுள்ளது. இதையடுத்து சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி வழக்குப் பதிவு செய்த மணிமங்கலம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு கொள்ளையர்களை வலைவீசித் தேடி வருகின்றனர்.
ஏற்கெனவே கடந்த ஆண்டு கரோனா ஊரடங்கின்போது, குமரேசன் தனது குடும்பத்துடன் தூத்துக்குடி சென்றபோது வீட்டில் ஆட்கள் இல்லாததை அறிந்த அடையாளம் தெரியாத நபர்கள் முன்கதவை உடைத்து எரிவாயு சிலிண்டர்கள், தொலைக்காட்சிப் பெட்டி, வெள்ளிப் பொருட்கள் என 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களை கொள்ளையடித்துச் சென்றதால் வீட்டில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தபட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
இதுவரை இச்சம்பவம் குறித்து மணிமங்கலம் காவல் துறையினர் கொள்ளையர்களை பிடிக்க எந்த வித நடவடிக்கையும் எடுக்காததே மீண்டும் அதே வீட்டில் கொள்ளை சம்பவம் அரங்கேறி இருப்பதற்கு காரணம் என அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர்.
ஒரே வீட்டில் அடுத்தடுத்து கொள்ளையர்கள் தங்களின் கைவரிசையை காட்டியுள்ளதால் அப்பகுதி மக்கள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இதையும் படிங்க: ஆதிசக்தியின் அவதாரம் என பகீர் கிளப்பிய அன்னபூரணியின் பிறந்தநாள் விழா!