டிஎன்பிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் 7ஆவது லீக் போட்டியில் காரைக்குடி காளை அணியும், காஞ்சி வீரன்ஸ் அணியும் மோதின. முதலில் டாஸ் வென்ற காரைக்குடி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
முதலில் ஆடிய காஞ்சி வீரன்ஸ் அணி நிர்ணயிக்கபட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்களை எடுத்தது. அந்த அணியில் சிறப்பாக விளையாடிய சஞ்சய் யாதவ் 60 பந்துகளில் 95 ரன்களை விளாசினார்.
அதன் பின் 178 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய காரைக்குடி காளை அணியின் கேப்டன் அனிருதா ரன் ஏதும் எடுக்காமல் பெவிலியன் திரும்பினார்.
அதன் பின் காஞ்சி அணியின் ராஜகோபால் சதிஷின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் காரைக்குடி காளை அணி வீரர்கள் வந்த வேகத்தில் நடையைகட்டினர்.
இறுதியில் 14.4 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 67 ரன்களை மட்டுமே அந்த அணி எடுத்தது. மேலும், காரைக்குடி அணியில் எட்டு வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் வெளியேறியது குறிப்பிடத்தக்கது. காஞ்சி வீரன்ஸ் அணி சார்பில் சதிஷ் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதன் மூலம் 110 ரன்கள் வித்தியாசத்தில் காரைக்குடி காளை அணியை வீழ்த்தி காஞ்சி வீரன்ஸ் அணி அபார வெற்றி பெற்றது. சிறப்பாக பந்துவீசி வெற்றிக்கு உதவிய ராஜகோபால் சதிஷ் ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.