காஞ்சிபுரம்: 2022ஆம் ஆண்டு இந்தியாவின் 75ஆவது ஆண்டு சுதந்திர தினத்தைக் கொண்டாடும் வகையில் என்.டி.ஆர்.எஃப். எனப்படும் தேசிய வடிவமைப்பு ஆராய்ச்சி மன்றம் என்ற அமைப்பு மூலம் பள்ளி, கல்லூரி மாணவர்களைக் கொண்டு, 75 செயற்கைக்கோள்களைத் தயாரித்து விண்ணில் செலுத்தத் திட்டமிட்டுள்ளது.
அதற்கான முன்னோட்டமாக காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் சுங்குவார்சத்திரம் சாலைப் பகுதியில் உள்ள ஜேப்பியார் பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் 2018ஆம் ஆண்டில் பொறியியல் மாணவர்கள், ஆசிரியர்களின் முயற்சியால் கல்லூரியிலேயே ஒரு செயற்கைக்கோள் ஆய்வகத்தை அமைத்தனர்.
கல்லூரிக்குச் சொந்தமாக ஒரு செயற்கைக்கோளை விண்ணில் செலுத்த வேண்டும் என்ற முயற்சியுடன் அவர்கள் செயல்பட்டுவந்தனர். தொடர்ந்து கல்லூரியில் உள்ள பல்வேறு துறைகளைச் சார்ந்த 12 மாணவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு உரிய பயிற்சி அளித்து 460 கிராம் மட்டுமே எடையுள்ள நானோ செயற்கைக்கோளை அவர்கள் சொந்தமாக உருவாக்கினார்கள்.
யூனிட்டி சாட் ஜே.ஐ.டி. சாட் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தச் செயற்கைக்கோள் இன்று விண்ணில் செலுத்தப்பட்ட செயற்கைக்கோளை கண்காணித்து அது அனுப்பும் முக்கிய தரவுகளை பெற்று செயல்படுவதற்கு கல்லூரி வளாகத்தில் அனைத்துவித ஏற்பாடுகளுடன் கண்காணிப்பு தரைதள கட்டுப்பாட்டு அறை தயாராக உள்ளதாக செயற்கைகோள் ஆராய்ச்சியில் ஈடுபடும் பேராசிரியர்களும் மாணவர்களும் தெரிவித்து உள்ளனர்.
மேலும், இந்தச் செயற்கைக்கோள் அனுப்பும் தரவுகளை வைத்து கல்லூரியைச் சுற்றியுள்ள ஸ்ரீபெரும்புதூர், சுங்குவார்சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுச்சூழல் மாசு, நீராதாரம், சுகாதாரச் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது உள்ளிட்ட நடவடிக்கை மேற்கொள்ள உள்ளதாகத் தெரிவித்தனர்.