காஞ்சிபுரம் மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற வரதராஜப் பெருமாள் கோயிலில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை அத்திவரதர் திருவிழா வெகுவிமர்சையாக நடைபெறும். ஜூலை 1ஆம் தேதி தொடங்கும் இத்திருவிழாவிற்கு உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
வெளியூரிலிருந்து வாகனங்களில் வரும் பக்தர்கள் தங்களது வாகனங்களை தற்காலிக பேருந்து நிலையங்களில் நிறுத்திவிட்டு பேருந்து மூலமாக கோயில் அருகே வருவதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்துள்ளது.
மேலும், காஞ்சிபுரம் நகர் பகுதியில் உள்ள வாகனங்கள் வைத்திருக்கும் பக்தர்கள் முன்னேற்பாடாக அனுமதி சீட்டு பெற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் பொன்னையா தெரிவித்திருந்தார்.
இதன்படி, இன்று காலை 8 மணி முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் அனுமதிச் சீட்டு வாங்குவதற்காக நீண்ட வரிசையில் வெயிலையும் பொருட்படுத்தாது காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக மைதானத்தில் குவிந்தனர். இந்த அனுமதி சீட்டினை காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து சார்பில் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் வழங்கினர்.