காஞ்சிபுரம்: வாலாஜாபாத் அருகே அவளூர் கிராமத்தைச் சேர்ந்த ஜெயஸ்ரீ என்பவர் உக்ரைன் நாட்டில் கிழக்கு மாகாணத்தில் உள்ள சுமி பகுதியில் உள்ள மருத்துவப் பல்கலைக்கழகத்தில் ஐந்தாம் ஆண்டு பயின்றுவருகிறார்.
மேலும் இவரைப்போல் தமிழ்நாட்டைச் சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் அதே மருத்துவப் பல்கலைக்கழகத்தில் ஆறாம் ஆண்டு பயின்றுவருகின்றனர். இந்நிலையில் அவருடன் தங்கி இருக்கும் மருத்துவ மாணவர்கள் தற்போது கூட்டாகச் சேர்ந்து காணொலிப் பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளனர்.
ஸ்டாலினுக்கு காணொலி மூலம் கோரிக்கை
அதில், ரஷ்யா நாட்டின் தொடர் தாக்குதல்களால் அப்பகுதியில் எமர்ஜென்சி நிலவிவருவதால் அங்கு வாழும் தமிழ்நாட்டு மாணவர்களை கீழ்த்தளத்தில் தங்கவைத்துள்ளதாகவும், தற்போது அவர்கள் கையிருப்பில் குறைந்தளவில் உணவுகள் மட்டுமே இருப்பதாகவும், உணவிற்கு அதிகத் தட்டுப்பாடு உள்ளதாகவும் கூறுகின்றனர்.
மேலும் உணவு இடைவேளை நேரத்தில் மட்டுமே மேல்தளத்தில் சென்று உணவு அருந்திவிட்டு மீண்டும் கீழ்த்தளத்தில் சென்றுவிடுகின்றனர். அப்பகுதியில் இணைய வசதி, உணவு, குடிநீர் உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய சேவைகளும் முற்றிலுமாக முடங்கியுள்ளதாகவும், போக்குவரத்துச் சேவைக்கு முற்றிலுமாகத் தடை உள்ளதால் அப்பகுதியில் வாழும் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் எங்குச் செல்வது என்று செய்வது அறியாமல் தவித்துவருவதாகவும், தங்களை மீட்பதற்கான அனைத்து துரித நடவடிக்கைகளையும் மத்திய மாநில அரசுகளும், தமிழ்நாடு முதலமைச்சரும் கருத்தில்கொண்டு தங்களை உரிய நேரத்தில் மீட்க வேண்டும் எனக் காணொலிப் பதிவு மூலம் கோரிக்கைவைத்துள்ளனர்.
இதையும் படிங்க:உக்ரைனில் தவிக்கும் மாணவர்கள் - பெற்றோர் கதறல்