காஞ்சிபுரம் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயிலில் அத்திவரதர் சிலை உள்ளது. இந்த சிலையை 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை வெளியே எடுத்து சிறப்புப் பூஜை செய்வார்கள் என்பதால் அத்திவரதர் சிலையைத் தரிசிக்கத் தமிழ்நாட்டிலுள்ள பல மாவட்டங்களிலிருந்தும் மக்கள் வருகைதருகின்றனர். மேலும், கூட்ட நெரிசலில் சிக்கி நான்கு பேர் இறந்துள்ளனர். இதனையடுத்து, மாவட்ட நிர்வாகம் பாதுகாப்பு நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அதில், ” ஜூலை 31ஆம் தேதி அத்திவரதர் வைபவ மாலை 5 மணி வரை மட்டுமே நடைபெறும். ஏனெனில், ஆகஸ்ட் 1 முதல் அத்திவரதர் நின்ற திருக்கோலத்தில் காட்சி அளிப்பதற்கான ஏற்பாடுகள் செய்வதற்காக இவ்வாறு பின்பற்றப்படுகிறது. ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 17ஆம் தேதி வரை நின்ற திருக்கோலத்தில் அத்திவரதர் காட்சி அளிப்பார். அதனால் வருகிற ஜூலை 31ஆம் தேதி பொது தரிசனத்தில் நுழைவு வாயில் நண்பகல் 12 மணி அளவில் மூடப்பட்டு கோயில் வளாகத்தில் இருக்கக்கூடிய பக்தர்கள் மாலை 5 மணிவரை மட்டுமே தரிசனம் செய்வதற்கு அனுமதிக்கப்படுவார்கள்.
அதேபோல் VIP பக்தர்கள் மாலை 3 மணிவரை மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். இந்து அறநிலையத் துறை சார்பாக ஏற்படுத்தப்பட்டு இருக்கக்கூடிய online பாஸ் வைத்திருப்பவர்கள் நண்பகல் 12 மணியிலிருந்து மதியம் 3 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். மேலும், ஆகஸ்ட் 1ஆம் தேதி வழக்கம்போல் காலை 5 மணியிலிருந்து அத்திவரதர் நின்ற திருக்கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.