காஞ்சிபுரம்: சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை காரப்பேட்டை பகுதியிலுள்ள மாவட்ட மருந்துகள் பண்டக கிடங்கினை, இன்று (அக்.18) தமிழ்நாடு மருத்துவப்பணிகள் கழகம் மேலாண்மை இயக்குநர் தீபக் ஜேக்கப், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் டாக்டர் எம். ஆர்த்தியுடன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்த மருந்து கிடங்கில் கையிருப்பில் சேமிக்கப்பட்டுள்ள மருந்துகளின் எண்ணிக்கை விவரங்கள் குறித்து கிடங்கு அதிகாரிகளிடம் கேட்டறிந்தும், அது குறித்தான ஆய்வினையும் அவர் மேற்கொண்டார்.
அதன் பின் செய்தியாளர்களிடம், தமிழ்நாடு மருத்துவப்பணிகள் கழகம் மேலாண்மை இயக்குநர் தீபக் ஜேக்கப் தெரிவிக்கையில், இன்றைக்கு இந்த மருந்து கிடங்கினை மாவட்ட ஆட்சியருடன் சேர்ந்து ஆய்வு செய்தபோது இந்த மருந்து கிடங்கில் ரூ.7.61 கோடி மதிப்புள்ள மருந்து பொருட்கள் இங்கு கையிருப்பில் உள்ளன.
தமிழ்நாடு முழுவதும் உள்ள 32 மருந்து கிடங்குகளில் ரூ.230 கோடி மதிப்புடைய மருந்துகள் கையிருப்பில் உள்ளன. ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனை, அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளுக்கு கடந்த இரு வாரங்களுக்கு முன்னரே இந்த காலாண்டிற்கு வரை தேவையான மருந்துகள் அனைத்தும் விநியோகிக்கப்பட்டுள்ளது.
மருந்து தட்டுப்பாடுகள் ஏற்பட்டுள்ளதா? என்பதனை கண்டறிந்து ஆய்வு மேற்கொள்ளவே இன்றைக்கு ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இங்குள்ள மருந்து கிடங்கில் தேவையான அளவிற்கு மருந்துகள் கையிருப்பில் உள்ளன என்றார்.
இந்த ஆய்வின் போது காஞ்சிபுரம் மாவட்ட மருத்துவப்பணிகள் இணை இயக்குநர் கிருஷ்ணகுமாரி, அறிஞர் அண்ணா புற்றுநோய் மருத்துவமனை இயக்குநர் மருத்துவர் சீனுவாசன் மற்றும் மருத்துவ அலுவலர்கள் என பலர் உடனிருந்தனர்.
இதையும் படிங்க:மகராஷ்டிராவில் புதிய வகை கரோனா... மாநில அரசு எச்சரிக்கை...